குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: அணைகளின் நீர்மட்டம் உச்ச அளவை நெருங்குகிறது
By குலசேகரம் | Published on : 31st October 2014 11:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குமரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உச்ச அளவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அணைகள் கடைசியாக 2010 ஆம் ஆண்டு முழுமையாக நிரம்பின. அந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழையைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் தீவிரமாகப் பெய்ததால் அணைகள் நிரம்பியதுடன் அணைகளின் மறுகால் மதகுகளும் திறக்கப்பட்டன.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக போதிய மழையின்மையால் அணைகளில் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயரவில்லை. இதனால் பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் கொடுக்கமுடியாத நிலை இருந்து வந்தது.
நிகழாண்டு அதிக மழை: நிகழாண்டு கடந்த ஜூன் மாதம் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்ட போது அணையில் நீர்மட்டம் 20 அடியில் இருந்தது. தொடர்ந்து மழை பெய்யாத நிலையில், சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டது. மேலும், அணைகளில் நீர்மட்டம் குறைந்ததால் சுழற்சி முறையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு கன்னிப்பூ சாகுபடி நிறைவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் பருவ சாகுபடியான கும்பப்பூ சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் ஏக்கத்துடன் இருந்த நிலையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்து அணைகள் நிறைந்து வருகின்றன. இதனால் மாவட்டத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
40 அடியைக் கடந்த பேச்சிப்பாறை அணை: தற்போது அணையின் நீர்மட்டம் 40 அடியைக் கடந்துள்ளது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 40.15 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 582 கன அடியாகவும் இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68.95 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 757 கன அடியாகவும், அணையிலிருந்து பாசனக் கால்வாய் வழியாக வெளியேறும் தண்ணீர் விநாடிக்கு 600 கன அடியாகவும் இருந்தது.
சிற்றாறு அணையில் உபரிநீர் வெளியேற்றம்: மழை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் சிற்றாறு அணைகளுக்கு வரும் தண்ணீரும் அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் தண்ணீர் சிற்றாறு 1 அணையிலிருந்து புதன்கிழமை மாலை முதல் வெளியேற்றப்படுகிறது.