சுடச்சுட

    

    விவேகானந்த கேந்திர நிறுவனர்  ஏக்நாத் ரானடே 100ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்:  தில்லியில் பிரதமர் நவ. 9இல் தொடங்கிவைக்கிறார்

    By  கன்னியாகுமரி,  |   Published on : 31st October 2014 11:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவேகானந்த கேந்திர நிறுவனர் ஏக்நாத் ரானடேவின் 100 ஆவது பிறந்த நாளை நவ. 19 இல் நாடு முழுவதும் கொண்டாட விவேகானந்த கேந்திரம் திட்டமிட்டுள்ளது. தொடக்க நிகழ்ச்சியை தில்லி விஞ்ஞான பவனில் நவம்பர் 9 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
     ஏக்நாத் ரானடேவின் 100 ஆவது பிறந்தநாளை விவேகானந்த கேந்திரம் ஒரு வாழ்க்கை ஒரு குறிக்கோள் என்ற கோட்பாட்டின் கீழ் நாடு முழுவதும் ஓராண்டுகள் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு ஏக்நாத் ஜி ஜென்மஷதி என பெயரிடப்பட்டுள்ளது.
     இக் கொண்டாட்டத்துக்காக குமரி மாவட்டத்தில் 5 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், குமரி மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தாணுமாலய பெருமாள், வரலாற்று ஆய்வாளர் முனைவர் பத்மநாபன், ஹோட்டல் சங்கம் குரூப்ஸ் உரிமையாளர் கோபி, விவேகானந்தா கல்லூரிச் செயலர் டாக்டர் ஆர்.அருண்குமார், கேந்திர மகளிர் திட்ட பொறுப்பாளர் புவனேஸ்வரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
     இக் குழுவின் தமிழ்நாடு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணசுவாமி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அமைக்க ஏக்நாத் ரானடே 323 மக்களவை உறுப்பினர்களின் கையெழுத்தைப் பெற்றதுடன் அப்போதைய தமிழக முதல்வரான பக்தவச்சலத்தின் அனுமதியைப் பெற்றார். இது மட்டுமன்றி இந்திய இளைஞர்களின் சேவையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் விவேகானந்த கேந்திரத்தை அவர் உருவாக்கினார்.
     இதன் காரணமாக அவரது 100 ஆவது பிறந்த நாளை ஓராண்டுகள் கொண்டாட விவேகானந்த கேந்திரம் முடிவு செய்துள்ளது.
     இதற்கான முதல் நிகழ்ச்சியை தில்லி விஞ்ஞான பவனில் நவம்பர் 9 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். மேலும், இளைஞர்களுக்காக இளைய பாரதம் என்ற நிகழ்ச்சியை நடத்தவும், இந்தியா முழுவதும் 500 இடங்களில் மாநாடுகள் நடத்தவும் கேந்திர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
     ஏக்நாத் ரானடேவின் வெற்றி ரகசியங்கள் என்ற புத்தகம் அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடவும், அவரது வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும் குறும்படம் வெளியிடவும், நவம்பர் 19 ஆம் தேதி கன்னியாகுமரியில் மாபெரும் எழுச்சிப் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai