Enable Javscript for better performance
ஆதரவின்றித் தவிக்கும் யானைக்கால் நோயாளிகள்- Dinamani

சுடச்சுட

    

    ஆதரவின்றித் தவிக்கும் யானைக்கால் நோயாளிகள்

    By நாகர்கோவில்  |   Published on : 17th April 2015 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு இல்லம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேலைகள் எதுவும் செய்ய இயலாது என்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் எங்களை பாரமாக நினைக்கின்றனர். எங்களால் வெகுநேரம் நிற்க முடியாது என்பதால் மருத்துவமனைக்குச் சென்று மருந்துகள் வாங்கக் கூட இயலாத நிலையில் உள்ளோம்.

    எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுவது போல் இலவச பயண அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தினரால் கைவிடப்பட்டு அனாதைகளாக உள்ள எங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் வாரம் தோறும் மதிய உணவு மற்றும் மருந்துகள் வழங்கி வருகிறது. எனவே, நாங்கள் மன நிறைவுடன், நிம்மதியாக வாழ குமரி மாவட்டத்தில் மருத்துவ வசதியுடன் கூடிய ஆதரவு இல்லம் அமைத்து தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பிஎச்டி இந்தியா என்ற தனியார் அமைப்பின் நிறுவனர் சூசைமரியான் கூறியதாவது: தமிழகத்தில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 5,654 பேருக்கு கருணைத்தொகையாக மாதம் தோறும் ரூ. 1,000-ம், 35 கிலோ அரிசியும் அரசு வழங்கி வருகிறது.

    இதில் குமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 3,300 நோயாளிகளில் 516 பேருக்கு உதவித்தொகை கிடைத்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கச் செய்வதோடு அவர்களுக்கென தனியாக ஆதரவு இல்லம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai