Enable Javscript for better performance
விவசாயிகள் வேதனை- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஆறுகள், கால்வாய்களைத் தூர்வார மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இம்மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வாய், குளங்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் உள்ளன. இதனால் குளங்களில் மண் தூர்ந்து நிலத்தடி நீர் வேகமாக வற்றி வருகிறது. மேலும் குளங்களின் கரைகள் பலம் இழந்து பாழ்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளிலும் மடைகள், ஷட்டர்கள் உடைந்து பழுதான நிலையில் உள்ளதால் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கு வருவதில்லை.

    எனவே, விவசாய விளை நிலங்களையும், நீராதாரங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மண் மேடாக உள்ள குளங்களைத் தூர்வாரியும், குளங்களின் கரைகளைப் பலப்படுத்தியும், மடைகள் மற்றும் ஷட்டர்களைப் பழுது நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து குமரி மாவட்ட பாசனத் துறைத் தலைவர் ஏ.வின்ஸ் ஆன்றோ கூறியதாவது: குமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிந்தபோது இம்மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான குளங்கள் இருந்தன. தற்போதைய நிலவரப்படி 4,200-க்கும் குறைவான குளங்களே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் மட்டும் 2,500 குளங்களும், உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் 1,000 குளங்களும், கோயில் வகைகளில் 400 குளங்களும், நிலவியல் என்ற பெயரில் 100 தனியார் குளங்களும் உள்ளன.

    இம்மாவட்டத்தைப் பொருத்தவரை ஆண்டின் எல்லா நாள்களிலும் தண்ணீர் செல்லும் நீரோடைகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், குளங்கள் ஆகியன விவசாயத்துக்குப் பக்க பலமாக இருந்து வந்தன. அவை பராமரிக்கப்படாததால் பெரும்பாலான விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறியுள்ளன.

    விவசாயிகளின் நலன் கருதி பராமரிப்பின்றி காணப்படும் குளங்களை, ஆறுகளை, கால்வாய்களைத் தூர்வாரிப் பராமரிக்க வேண்டுமென அதிகாரிகளைச் சந்தித்து மாதம் தவறாமல் மனுக்கள் அளித்து வருகிறோம். ஆனால் எவ்விதப் பலனும் ஏற்படவில்லை. சட்டவிதிகள், நீதிமன்றத் தீர்ப்புகளைக் காரணம் காட்டி தட்டிக்கழிக்கின்றனர். விவசாயத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் வகையில், அதிகாரிகள் ஆறுகள், குளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai