Enable Javscript for better performance
குடியரசு தின விழா : பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தின விழா : பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

    By நாகர்கோவில்,  |   Published on : 27th January 2015 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தேசிய கொடியை ஏற்றி பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை திங்கள்கிழமை வழங்கினார்.

    நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 66 ஆவது குடியரசு தினவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    பின் திறந்த ஜீப்பில் சென்ற ஆட்சியர், காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் உடன் சென்றார். பின் வண்ண பலூன்களை ஆட்சியர் பறக்க விட்டார்.

    காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 47 தலைமைக் காவலர்களுக்கு முதல்வரின் பதக்கங்களை ஆட்சியர் வழங்கினார்.

    ஊர்க்காவல்படையில் சிறப்பாக பணியாற்றிய 20 பேருக்கும் நற்சான்றுகள் வழங்கப்பட்டன.

    வருவாய்த்துறையில் கிராம உதவியாளர்களாக 10 ஆண்டு பணிமுடித்த எஸ். சிவஞானம், என். பாலகிருஷ்ணன், ஒய். பால்ராஜ் உள்ளிட்ட 13 பேருக்கு கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வுக்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு செவித்துணை கருவிகளும் வழங்கப்பட்டன.

    பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 178 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறப்பாக பொது தொண்டு புரிந்த சமூக பணியாளர்களான மருத்துவர் டி.கே நாகேந்திரன், ஆர். அருள்கண்ணன், மீனவர் மேம்பாட்டு அறக்கட்டளைத் தலைவர் பி.ஜஸ்டின் ஆன்றனி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.

    வேளாண், தோட்டக்கலைத் துறைகள் சார்பில் இடுபொருள்கள், வேளாண் பொறியியல் துறை சார்பில் கருவிகள், தொழிலாளர் நலத்துறை சார்பில் நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    கலைநிகழ்ச்சிகள்: விழாவின் நிறைவாக பள்ளி மாணவர், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், 7 பள்ளிகள் சார்பில் 545 மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.

    சிறப்பான முறையில் வந்தே மாதரம் பாடலுக்கு நடன நிகழ்ச்சி நடத்திய எறும்புக்காடு சாந்தி நிலைய சிறப்புப் பள்ளிக்கு முதல் பரிசும், ஹிந்தி பாடலுக்கு நடன நிகழ்ச்சி நடத்திய மயிலாடி எஸ்.எம். மெட்ரிக் பள்ளிக்கு இரண்டாவது பரிசும், இது இந்திய தேசம் என்ற பாடலுக்கு நடனம் நிகழ்ச்சி நடத்திய நாகர்கோவில் ஹோம் சார்ச் மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கு மூன்றாவது பரிசும், ஏனைய பள்ளிகளுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai