Enable Javscript for better performance
\\\"ஒளவையின் நீதிபோதனைகள் மனித வாழ்க்கையை மேம்படுத்தும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "ஒளவையின் நீதிபோதனைகள் மனித வாழ்க்கையை மேம்படுத்தும்'

    By நாகர்கோவில்  |   Published on : 28th January 2015 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகர்கோவில், ஜன. 27: ஒளவையின் நீதிபோதனைகள் மனித வாழ்க்கையை மேம்படுத்தும் என, ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் எஸ்.சுப்பிரமணிய பிள்ளை கூறினார்.

    குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கி அம்மன் ஆலயத்தில், "ஒளவைத் தமிழ்க் களஞ்சியம் 2015' என்ற நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒளவைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரான வேம்பத்தூர் கிருஷ்ணன் எழுதிய இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் எஸ். சுப்பிரமணிய பிள்ளை தலைமை வகித்துப் பேசியது:

    குமரி மாவட்டத்துக்கும் ஒளவைக்கும் நீண்ட வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன.  திருக்குறளை திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடியில் எழுதினார். ஆனால், ஒளவையார் ஓரடியில் தனது ஆழ்ந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

    பள்ளிகளில் நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொள்ள நீதிபோதனைக்காக ஒரு பாடவேளை முன்பு ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த வகுப்புகள் இப்போது இல்லை. அன்று நீதிக் கதைகளைச் சொல்லியே குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். ஆனால், இன்று மேலைநாட்டுக் கலாசாரமானது நமது பண்பாடு, கலாசாரத்தைச் சீரழித்து வருகிறது. இதில் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெண்கள் அன்று தெய்வமாக மதிக்கப்பட்டனர். இன்று கலாசார சீரழிவுகளால் பெண்களின் வாழ்க்கையே சீரழிக்கப்படுகிறது. நம்மிடம் நல்லொழுக்கம் இல்லாததே இதற்குக் காரணம். ஒளவையாரின் நீதிபோதனைகள் மனித வாழ்க்கையை மேம்படுத்தும் என்றார்.

    நூல் ஆசிரியர் வேம்பத்தூர் கிருஷ்ணன் பேசியது:

    சென்னையில் ஒளவைக்கு கோட்டம் அமைக்க வேண்டும் என்ற தணியாத தாகம் என்னிடம் உள்ளது. இந்த நூலில் 150 தமிழ் அறிஞர்கள் ஒளவையைப் பற்றி ஆய்வு செய்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒளவைக்கும் நாஞ்சில் நாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதால், இந்நூலை முப்பந்தலில் வெளியிட முடிவு செய்தேன் என்றார்.

    விழாவில், நூலை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த, பாஜக மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி வெளியிட, ஆரல்வாய்மொழி ஹிந்து வித்யாலயா முதல்வர் யு.எஸ். கஸ்தூரி பெற்றுக்கொண்டார்.

    அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் இ. பொன்னுலிங்கம், குமரி மாவட்ட கவிதை உறவு அமைப்பாளர் டாக்டர் கு. சிதம்பர நடராஜன், கவிமணி நற்பணி மன்ற அமைப்பாளர் டாக்டர் டி.கே. நாகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, சென்னை கலாலயம் மற்றும் தர்ம சஞ்சீவினி பவனம் அறக்கட்டளை தலைமை அறங்காவலர் ராம் ராம் முரளி வரவேற்றார்.

    விழா ஏற்பாடுகளை எம்.கே. முத்தையா, எம்.கே. வாசுதேவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai