Enable Javscript for better performance
பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத பேச்சிப்பாறை-கோதையாறு சாலை- Dinamani

சுடச்சுட

    

    பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத பேச்சிப்பாறை-கோதையாறு சாலை

    By குலசேகரம்  |   Published on : 28th January 2015 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குலசேகரம், ஜன. 27: குமரி மாவட்டம், கோதையாறு மின்நிலையம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடப்பதால், இந்தச் சாலை வழியாகச் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    பேச்சிப்பாறை அணை அருகிலிருந்து கோதையாறு மின் நிலையம் செல்லும் சாலை 14 கி.மீ. தொலைவு கொண்டது. இந்தச் சாலை கோதையாறில் மின்நிலையங்கள் அமைக்கப்பட்ட போது வனப்பகுதி வழியாக உருவாக்கப்பட்டதாகும். இதனால் இந்தச் சாலையை பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பு கோதையாறு மின் நிலையத்திடம் உள்ளது.

    இந்தச் சாலை வழியாகவே கோதையாறு மின் நிலையங்கள், கோதையாறு மின் நிலைய ஊழியர் குடியிருப்புகள், கோதையாறு சந்தைப் பகுதி, அரசு ரப்பர் கழக சிற்றாறு, மயிலாறு, கல்லாறு, குற்றியாறு பிரிவு அலுவலகங்கள், தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் மோதிரமலை உள்ளிட்ட பழங்குடி குடியிருப்புகள் உள்ளிட்டவற்றுக்குச்   செல்ல

    வேண்டும்.

    இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்தச் சாலை சீரமைக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்தச் சாலை வழியாகச் செல்லும் பழங்குடி மக்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இந்தச் சாலை வழியாக செல்லமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. அபாய வளைவுகளை கொண்ட இச்சாலை சேதமடைந்து கிடப்பதால் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து, கடையல் பேரூராட்சி மற்றும் பேச்சிப்பாறை ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் கோதையாறு மின் நிலைய அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

    மேலும் பல்வேறு அரசியல் கட்சியினரும் இச்சாலையைச் சீரமைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து, தேமுதிக மாவட்ட மாணவர் அணிச் செயலர் டல்லஸ் கூறியதாவது: பேச்சிப்பாறையிலிருந்து கோதையாறுக்கு செல்லும் சாலை, மின் நிலையப் பராமரிப்பில் உள்ளது. மின் நிலையம் நீண்டகாலமாக இந்தச் சாலையை சீரமைக்காததால் இந்தச் சாலை வழியாக வாகனங்களை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க மின் நிலையம் முன்வரவேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai