Enable Javscript for better performance
கிழக்கு கடலோரப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கிழக்கு கடலோரப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் இன்று தொடக்கம்

    By கன்னியாகுமரி  |   Published on : 15th April 2016 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடலோரப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் வெள்ளிக்கிழமை (ஏப்.15) தொடங்குகிறது. இந்த தடைக்காலம் 45 நாள்கள் அமலில் உள்ளதால் மீன்கள் விலை கணிசமாக உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப். 15 ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரை மீன்களின் இனவிருத்தி காலமாக கருதப்படுகிறது.

    இக் காலங்களில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்தால் மீன்கள் முட்டையிடுதல் மற்றும் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். எனவே, இந்த காலத்தை மீன்பிடித் தடைக்காலமாக மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் 275-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தொழில் செய்து வருகின்றன. தடைக்காலம் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், படகுகள் அனைத்தும் படகுதளத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தடைக்காலம் அமலில் இருக்கும் நாள்களில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பழுது நீக்குதல், பெயிண்டிங் மற்றும் வலை, இயந்திரங்கள் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்வது வழக்கம். இதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர் வேலையாள்கள் துறைமுக வளாகத்தில் முகாமிட்டுள்ளனர்.

    மீன்கள் விலை உயர்வு: விசைப்படகு மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாத நிலையில் மீன்களின் தேவை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். தடைக்காலத்தில் ஆரோக்கியபுரம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி ஆகிய கடற்கரைப் பகுதிகளில் வள்ளங்கள் மூலம் பிடித்து வரும் மீன்களுக்கு கிராக்கி ஏற்படுவது வழக்கம்.

    பொதுமக்களுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும் மீன்களைப் போட்டி போட்டுக் கொண்டு ஏலத்தில் எடுத்துச் செல்வதால் மீன்கள் விலை கணிசமாக உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai