Enable Javscript for better performance
குமரியில் கடல் சீற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குமரியில் கடல் சீற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

    By ஜங்ஷன் - intro  |   Published on : 21st May 2016 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    குமரி மேற்கு மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.  ராட்சத அலைகள் கடற்கரையை ஒட்டியுள்ள வீடுகள் வரை செல்வதால் மீனவர்கள் தங்களது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

    கடலோர கிராமங்களில் மழையுடன் சூறைக்காற்றும் வீசி வருகிறது. இதனால் சின்னதுறை, இரயுமன்துறை, வள்ளவிளை, தூத்தூர் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. மணக்குடி, ராஜாக்கமங்கலம் துறை பகுதிகளிலும் ராட்சத அலைகள் 15 அடி முதல் 20 அடி  உயரத்துக்கு எழும்புகின்றன. கடல் சீற்றம், மழையின் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

    இந்நிலையில், கடலில் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்; மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தியுள்ளனர். சின்னதுறை, தூத்தூர் பகுதிகளில் கடல் சீற்றத்தினால் சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

    ராமன்துறை பகுதியில் குடியிருப்புகளில் புகுந்த கடல் நீர்: மாவட்டத்தில் கடலோர பகுதிகளான ராமன்துறை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் குடியிருப்புகளில் கடல்நீர் புகுந்து வீடுகள் சேதமடைந்தன.

    கருங்கல் அருகே உள்ள இனயம், இனயம்புத்தன்துறை, முள்ளூர்துறை, ராமன்துறை, அரையன்தோப்பு, தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் வெள்ளிக்கிழமை திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், ராமன்துறை பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் கடல் நீர் புகுந்தது. இதில் 2 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கடல் சீற்றத்தால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன், கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், குமரி மீனவப் பேரவைத் தலைவர் ஜோர்தான் உள்ளிட்டோர், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai