Enable Javscript for better performance
அடகு நகை ஏலம்: தனியார் நிதி நிறுவனத்துக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    அடகு வைத்த நகையை ஏலமிட்டதாக தனியார் நிதி நிறுவனத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
     நாகர்கோவில் ராணித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்பின்மேரி. இவர் தனியார் நிதி நிறுவனத்தில், தங்கச் சங்கிலியை கடந்த 2012 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ரூ.60 ஆயிரத்துக்கு அடகு வைத்திருந்தார். ஓர் ஆண்டு கடந்த நிலையில் நிதி நிறுவனத்தினர் கூறியது போல் வட்டியும் முதலுமாக ரூ.20,448ஐ 2013 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி செலுத்தியுள்ளார். அது  வரை வட்டித் தொகை வசூல் செய்துள்ளதாக நிறுவனத் தரப்பினரும் ரசீது கொடுத்துள்ளனர்.
    ஆனால் சில மாதங்களிலேயே நிதி நிறுவனத்தில் இருந்து ஏல அறிவிப்பு துண்டறிக்கை வந்துள்ளது. அதில் 20,448 ரூபாய் செலுத்தியதை கருத்தில் கொள்ளாமல், நகை அடகு வைத்த நாளில் இருந்தே வட்டி, அசல் கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஜோஸ்பின்மேரி, வழக்குரைஞர் மூலம் மறுப்பு நோட்டீஸ் அனுப்பினார். ஆனாலும் முழுத் தொகையையும் இரண்டு நாள்களுக்குள் வட்டியுடன் செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
     இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ஜோஸ்பின்மேரி, கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் எம்.தாமஸிடம் புகார் அளித்தார். அவர் இது தொடர்பாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் மன்றத் தலைவர் நாராயணசாமி, உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர், நிதி நிறுவனத்தின் சேவைக் குறைபாட்டை சுட்டிக் காட்டி நிதி நிறுவனம் 12 சதவிகித வட்டியுடன் நகைக்கடன் தொகையை கணக்கிட்டு, புகார்தாரரிடம் இருந்து ஏற்கெனவே பெற்றுக் கொண்ட ரூ.20448 ஐ குறைத்து, மீதமுள்ள தொகையை பெற்றுக் கொண்டு நகையை வழங்க வேண்டும் எனவும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.4 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூபாய் ஆயிரமும் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai