திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து குமரி மாவட்டத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 160 தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து சட்டப்பேரவை முன் மறியல் செய்த ஸ்டாலினும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவில் கோட்டாறு சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில மீனவரணிச் செயலருமான பெர்னார்டு தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வளர் அகிலன், ஷேக்தாவூத் உள்பட மறியலில் ஈடுபட்ட 48 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தக்கலை: இங்கு, திமுக பத்மநாபபுரம் நகரச் செயலர் டி.மணி தலைமையில், தெற்கு ஒன்றியச் செயலர் ரமேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் ஜோசப்ராஜ், வர்க்கீஸ், டைட்டஸ், சுந்தர்சிங், குமாரசுவாமி, ஷாபிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சாலை மறியலில் ஈடுபட்டதாக திமுகவினர் 27 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதே போல், திருவட்டாறு, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி உள்ளிட்ட பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட 85 பேர் என மொத்தம் 160 பேர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.