கோடையில் தென்னை மரங்களிலிருந்து அதிக அளவில் ஓலைகள் உலர்ந்து விழுவதால், கிராமங்களில் ஏழைப் பெண்கள் ஓலைகளிலிருந்து ஈர்க்குகளை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
தென்னை மரங்களை அதிகம் கொண்டுள்ள குமரி மாவட்டத்தில், தென்னை ஓலைகளைக் கொண்டு வீட்டுக் கூரைகள், தட்டிகள் முன்காலங்களில் அதிகளவில் அமைக்கப்பட்டு வந்தன. பின்னர் வீடுகள் கான்கிரீட் மேற்கூரைகளிலும், ஆஸ்பெஸ்டாஸ்மேற்கூரைகளிலும் அமைக்கப்படும் நிலையில் தென்னை ஓலைகள் பெரும்பாலும் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன.
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே மலவிளை கிராமத்திலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தென்னை ஓலை தட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
கும்பகோணம் பள்ளி
தீவிபத்து சம்பவத்திற்கு பிறகு தென்னை ஓலைக் கூரைகளை பள்ளிகள் மற்றும் இதர கட்டுமானங்களில் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தென்னை ஓலைகளின் விற்பனை முடங்கியது.
ஈர்க்குகளுக்கு மெளசு: தென்னை ஓலை தட்டிகளுக்கு மெளசு குறைந்துவிட்டாலும் தென்னை ஓலைகளிலிருந்து எடுக்கப்படும் ஈர்க்குகளுக்கான மெளசு தொடருகிறது. குச்சி ஐஸ் தயாரிக்கும் ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலைகள் தென்னை ஈர்க்குகளை கொள்முதல் செய்கின்றன. மேலும், துடைப்பான்கள் தயாரிக்கவும் அதிக அளவில் தென்னை ஓலை ஈர்க்குகளை சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் கிராமங்களில் பெண்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு தங்களது வீட்டுத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சிறிய அளவில் வருவாய் கிடைக்கிறது.
குலசேகரம் சந்தையில் தற்போது ஒரு கிலோ தென்னை ஈர்க்கு ரூ. 12}க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
கிராமப்புற ஏழைகளுக்கு பயன்: இதுகுறித்து குலசேகரம் சந்தையில் தென்னை ஈர்க்கு கொள்முதல் செய்யும் பொன்னுமணி கூறியதாவது:
தற்போது கோடைகாலமாதலால் தென்னை ஈர்க்குகள் அதிக அளவில் வருகின்றன. கிராமப்புற ஏழைப் பெண்களே தென்னை ஈர்க்குகளை அதிக அளவில் சேகரித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது ஒரு கிலோ ஈர்க்கு ரூ. 12க்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.