பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 8ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்; தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வியாழக்கிழமைமுதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர்.
அதன்படி குமரி மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலகங்கள் உள்பட பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்குச் செல்லாததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்டத்திலுள்ள பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் அவை வெறிச்சோடி காணப்பட்டன. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கியது. குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பகவதியப்பன், தியாகராஜன், சந்திரசேகர் ஆகியோர் தலைமை வகித்தனர். மூட்டா அமைப்பின் மண்டலத் தலைவர் மனோகர ஜெஸ்டஸ் போராட்டத்தை தொடங்கிவைத்தார். வருவாய்த் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கோலப்பன், செயலர் சுப்பிரமணியன், மாநிலச் செயலர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 63 பெண்கள் உள்பட 188 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் தொடக்கவுரையாற்றினார். மறியலில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள் 33 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தக்கலை: கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஜான்கிறிஸ்டோபர், ஜான்ராஜ் ஆகியோர் தலைமையில், தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பொதுச் செயலர் கனகராஜ் மறியல் போராட்டத்தை தொடங்கிவைத்தார். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சங்க முன்னாள் மாநில அமைப்பு செயலர் ஜிம்சன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மறியலில் ஈடுபட்ட 155 பெண்கள் உள்பட 220 பேரை போலீஸார் கைது செய்தனர்.
களியக்காவிளை: குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் எஸ். கனகராஜ் தலைமை வகித்தார். ஜாக்டோ -ஜியோ அமைப்பின் மாநில உயர்மட்ட குழு நிர்வாகி சி. பாலச்சந்தர், ஆசிரியர் சங்க குழித்துறை கல்வி மாவட்டத் தலைவர் பெஞ்சமின், விஜயராஜ், தலைமை ஆசிரியர் சங்க நிர்வாகி ஜோஸ் பென்சிகர், வருவாய்த் துறை அலுவலர் சங்க நிர்வாகி சதானந்தன் உள்ளிட்டோர் பேசினர்.
தொடர்ந்து, அவர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் சி.ஆர். ராஜகுமார் தொடங்கிவைத்துப் பேசினார்.
போராட்டத்தில், உடற்கல்வி ஆசிரியர் கழக நிர்வாகி ரைமண்ட், தமிழ் ஆசிரியர் கழக மாநில பொறுப்பாளர் கிறிஸ்டோபர், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் நிர்மலா, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் ராஜன், மூட்டா சங்க நான்காம் மண்டலத் தலைவர் ஹென்றி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மறியலில் ஈடுபட்ட 161 பெண்கள் உள்ளிட்ட 246 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.