மேம்பாலம் பணி: வெட்டுவெந்நியில் சாலை அடைப்பு

மார்த்தாண்டம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதையடுத்து,  தேசிய நெடுஞ்சாலையில் வெட்டுவெந்நி பாலம் அருகே சாலை முழுமையாக
Updated on
1 min read

மார்த்தாண்டம் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதையடுத்து,  தேசிய நெடுஞ்சாலையில் வெட்டுவெந்நி பாலம் அருகே சாலை முழுமையாக அடைக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  வெட்டுவெந்நி பகுதியிலிருந்து மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதி வரை 2.4 கி.மீ. தொலைவுக்கு ரூ. 179 கோடியில் இப் பாலம் அமைக்கப்படுகிறது.
மார்த்தாண்டம் சந்திப்பு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இப் பாலத்துக்கான தரைநிலை தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.  மேலும் மார்த்தாண்டத்தில் 5 -க்கும் மேற்பட்ட உயர்நிலை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெட்டுவெந்நி பகுதியில் தரைநிலை தூண்கள் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.  இதற்காக அப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப் பணிகள் காரணமாக இப் பகுதி வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது.  மேலும் இப்பகுதி வழியாக காப்புக்காடு உள்ளிட்ட பகுதிக்குச் செல்பவர்கள் மற்றும் குழித்துறை அரசு மருத்துவமனைக்குச் செல்பவர்களும் நடந்து சென்று வந்தனர்.  செவ்வாய்க்கிழமை முதல் வெட்டுவெந்நி பகுதியில் சாலை முழுமையாக அடைக்கப்பட்டதையடுத்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் குழித்துறை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை வழியாக வெட்டுவெந்நி சென்று திரும்பினர்.
 இந்த நிலையில் மலையோர பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததையடுத்து குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து,  தடுப்பணையை மூழ்கடித்து சென்றது. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் புதன்கிழமை தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதனால் குழித்துறை தடுப்பணை வழியாக இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக களியக்காவிளை உள்ளிட்ட மாவட்டத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த மக்கள் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.  இம் மருத்துவமனைக்கு வாகனங்களில் செல்பவர்கள் குழித்துறையிலிருந்து ஞாறான்விளை வழியாக பல கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, வெட்டுவெந்நி பாலம் அருகே சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் ஒரு பகுதியை அகற்றி, பொதுமக்கள் நடந்து செல்ல வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com