நாகர்கோவிலில் சேவை குறைபாட்டில் ஈடுபட்ட தனியார் வங்கிக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாகர்கோவில் சற்குணவீதி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த தனசெல்வி, இடலாக்குடிதனியார் வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாராம். இவரது வங்கிக் கணக்கில் கடந்த 1.3.2014 அன்று ரூ. 50 ஆயிரத்து 923 இருப்பு இருந்துள்ளது. இதனால் அவர் 3.3.2014 இல் ரூ. 48 ஆயிரத்து 220 க்கு எல்.ஐ.சி.க்கு காசோலை கொடுத்துள்ளார். பின்னர் இந்த தொகையை கழித்து அவரது கணக்கில் ரூ. 2073 இருந்துள்ளது. இந்நிலையில் 5.5.2015 அன்று அவரது வங்கிக் கணக்கு புத்தகத்தை பதிவு செய்தபோது ரூ. 900 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து தனசெல்வி வங்கியில் விவரம் கேட்டதற்கு கணக்கில் குறைந்த தொகை உள்ளதால் பணம் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சேமிப்புக் கணக்கில் ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் பணமிருந்தும், எந்தத் தகவலும் தராமல், தொகை பிடித்தம் செய்யப்பட்டதை அறிந்து, அந்த தொகையை மீண்டும் கணக்கில் வரவு வைக்கக் கோரியும், குமரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மாவட்டத் தலைவர் எம். தாமஸ் மூலம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத் தலைவர் ஆர். நாராயணசாமி, உறுப்பினர் சங்கர் ஆகியோர் வங்கியின் சேவைக்குறைபாட்டினை சுட்டிக்காட்டி, தனசெல்வியின் சேமிப்புக் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வரவு வைக்கவேண்டுமென்றும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ. 4 ஆயிரமும், வழக்குச் செலவுத் தொகை ரூ. 2 ஆயிரமும் ஒரு மாதத்துக்குள் வழங்கவேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் முழுத்தொகைக்கும் 6 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.