தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வலியுறுத்தி நாகர்கோவில் கோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் கோணம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நிகழ் கல்வியாண்டில் இருந்து செயல்பட்டுவரும் இந்தக் கல்லூரியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பயின்று வரும் மாணவ, மாணவியரில் பெரும்பாலோனோர் ஏழை, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் கல்லூரியில் ஆரம்பக் கல்வி முதல் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களே அதிகம் பயின்று வருகின்றனர்.
வழக்கமாக கல்லூரிகளில் பருவத் தேர்வின்போது ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிப் பாடம் தவிர மற்ற பாடங்கள் அனைத்தும் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். எனவே, தமிழ் மட்டும் தெரிந்த மாணவர்கள் எளிதாக தேர்வு எழுத வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் கல்லூரி பருவத் தேர்வில் நிகழாண்டு கேள்வித் தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என அறிவிப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழ் மட்டுமே தெரிந்த மாணவர்கள் தங்கள் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டித்தும், மாணவர்களை ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் கோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆரல்வாய்மொழியில்...ஆரல்வாய்மொழி, ஆக. 6: ஆரல்வாய்மொழியில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இக்கல்லூரியில் நிகழாண்டுமுதல் மாணவ, மாணவியர் தேர்வுகளை ஆங்கில வழியில் மட்டும் எழுதவேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து திங்கள்கிழமை காலையில் மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரிக்கு வந்த ஆரல்வாய்மொழி போலீஸார் மற்றும் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் மாணவ, மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, மாணவ, மாணவியரின் கோரிக்கைகளை மனுவாக பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர், பல்கலைக்கழகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.