நாகர்கோவிலில் மயக்க மருந்து தெளித்து பொறியாளரை கடத்தி நகை பறிப்பு
நாகர்கோவிலில் மயக்க மருந்து தெளித்து பொறியாளரை கடத்தி, 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி வணிகர் தெருவைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர், நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சக்தி மணிகண்டன்( 28). இவர் நெல்லை மாவட்டம், வடக்கன்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், கம்ப்யூட்டர் மென் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலுக்கு தனது கைக்கடிகாரத்தை சரிசெய்ய வந்தார். மீனாட்சிபுரம், ஆவின் பூத் அருகே பைக்கில் வந்த மர்ம நபர், சக்தி மணிகண்டனிடம் பேப்பரில் எழுதியிருந்த முகவரியை காட்டி எங்குள்ளது என, விசாரித்துள்ளார். திடீரென அந்த நபர் சக்திமணிகண்டன் முகத்தில் மயக்கமருந்தை தெளித்தாராம். மயங்கிய அவரை பைக்கில் வைத்து, திருப்பதிசாரம் அருகே ஒதுக்குப்புறமான இடத்துக்கு கொண்டு சென்று, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, பர்சில் இருந்த 2 ஏடிஎம் கார்டுகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு கையில் அணிந்திருந்த 2 பவுன் மதிப்புள்ள தங்கக் காப்பையும் பறிக்க முயன்றுள்ளார்.காப்பை கழற்ற முடியாததால், அவரைத் தாக்கி, அங்கேயே விட்டுச் சென்றனர். மயக்கம் தெளிந்ததும், சக்திமணிகண்டன் போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். கோட்டாறு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.