நாகர்கோவில் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது தாத்தா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பியூலா பெல் ஜனகாவுக்கு திங்கள்கிழமை செல்லிடப்பேசி மூலம் பேசிய ஒருவர், இருளப்பபுரம் பகுதியில் 4 வயது சிறுமி கொடுமைப்படுத்தப்படுவதாகவும், அவரை அவரது உறவினரே பாலியல் ரீதியில் தொல்லை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், இருளப்பபுரம் பகுதிக்குச் சென்று விசாரணை செய்ததில், 4 வயது சிறுமிக்கு அவரது தாத்தாவே பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி, தலைமைக் காவலர் ஜெமிலா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிறுமியின் பெற்றோர் பிரிந்து சென்றதால் அவரது உறவுப் பெண் பராமரித்து வந்ததும், அச்சிறுமிக்கு அவரது தாத்தா பால்ராஜ் (52) பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பால்ராஜை போலீஸார் கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்காக சிறுமி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.