அருள்வாக்கு கூறுவதாக பெண்ணை ஏமாற்றி ரூ.5 லட்சம், நகை பறிப்பு

அருள்வாக்கு கூறுவதாக சொல்லி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.5 லட்சம் மற்றும் 5 பவுன் நகையை

அருள்வாக்கு கூறுவதாக சொல்லி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.5 லட்சம் மற்றும் 5 பவுன் நகையை பறித்த சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
  இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மஞ்சுநாதா பகுதியைச் சேர்ந்த திருமால்,  அவரது மனைவி அம்லு ஆகியோர் நாகர்கோவிலில் குமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்தை சந்தித்து அளித்துள்ள புகார் மனு:    
ஓசூர் மஞ்சுநாதா பகுதியில் சாமியார் ஒருவர் அடிக்கடி அருள்வாக்கு சொல்வதற்கு வருவார்.  இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு  எங்கள் வீட்டுக்கு முன்பு வந்து நின்று அருள்வாக்கு கூறினார், மேலும் வீட்டுக்குள்  அழைத்தால் மேலும் பல விவரங்கள் கூறுவதாக தெரிவித்ததன்பேரில் அவரை வீட்டுக்குள் அனுமதித்தேன். பின்னர் அருள்வாக்கு பலிக்க வேண்டும் என்றால் நகைகளை தருமாறு கூறினார். நான் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை கழற்றிக் கொடுத்தேன். 
மேலும் வீட்டிலிருந்த ரூ. 5 லட்சம் பணத்தையும் வாங்கிக் கொண்டார்.  அவரிடம் நகை, பணத்தை திருப்பித்தருமாறு கேட்டேன். அதற்கு அவர் ஆண்டவன் மீண்டும் அருள்வாக்கு கூறும்போது வாங்கிய, நகை பணத்தை திருப்பித்தருவேன்என்று கூறிச்சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை.   
அவரை கண்டுபிடிக்க முயற்சித்த போது அவரது செல்லிடப்பேசி எண் கிடைத்தது. அதை வைத்து அவர் நாகர்கோவில் பகுதியில் இருப்பது தெரியவந்தது.  நாகர்கோவில் வந்தவுடன் அவரது செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டபோது  அது  இயங்கவில்லை.   எனவே போலீஸார் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு அவரை கண்டுபிடித்து நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com