Enable Javscript for better performance
குமரி மாவட்டத்தில் 1,350 பேருக்கு காசநோய் சிகிச்சை: இணை இயக்குநர்- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் 1,350 பேருக்கு காசநோய் சிகிச்சை: இணை இயக்குநர்

    By DIN  |   Published on : 24th March 2018 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1, 350 பேருக்கு காசநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றார் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் எ.வசந்தி.
    உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, ஆசாரிப்பள்ளம் காசநோய் மையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை காசநோய் ஒழிப்பு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    காசநோய் ஒழிப்பு சுடர் ஸ்தூபியில் இணை இயக்குநர் எ.வசந்தி காசநோய் ஒழிப்பு சுடரை ஏற்றி, மாணவர், மாணவிகளின் தொடர் ஓட்டத்தை தொடங்கிவைத்துப் பேசியது: இந்தியாவில் ஆண்டுக்கு 28 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். 4 லட்சம் பேர் காசநோயால் உயிரிழக்கின்றனர்.
    குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,350 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இதில், எச்ஐவி மற்றும் காசநோய் பாதிப்புக்குள்ளானோர் 36 பேர். சிபிநாட் என்னும் அதிநவீன கருவி மூலம் 1,948 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பன்முகத்தன்மை காசநோயாளிகள் 20 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இம்மாவட்டத்தில் காசநோயாளிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. இம்மாவட்டத்தை 2025-க்குள் காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.
    நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (காசநோய்) வி.பி.துரை, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) எம்.மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai