Enable Javscript for better performance
திருவட்டாறு, முட்டப்பதியில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திருவட்டாறு, முட்டப்பதியில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

    By DIN  |   Published on : 24th March 2018 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நாட்டிலுள்ள 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் தென்னிந்தியாவின் வைகுண்டம் எனப் போற்றப்படுகிறது. இக்கோயிலில் நடைபெறும் பங்குனி திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது.
    தற்போது இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தாற்காலிக கொடிமரம் அமைக்கப்பட்டு அதில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக, கொடிமரத்தின் சுவட்டில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் தந்திரி சஜித் சங்கரநாராயணரு கொடியை ஏற்றி வைத்தார்.
    இந்நிகழ்ச்சியில், கோயில் மேலாளர் மோகன் குமார், பக்தர்கள் சங்க நிர்வாகி சி. அனந்தகிருஷ்ணணன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து தீபாராதனை, சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனிவருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    இரண்டாம் நாள் திருவிழா முதல் எட்டாம் நாள் திருவிழா வரை தினமும் காலையில் ஸ்ரீமத்பாகவத பாராயணம், தீபாராதனை, சிறப்பு நாகஸ்வரம், சொற்பொழிவு மற்றும் இரவில் கதகளி உள்ளிட்டவை நடைபெறுகிறது. 9 ஆம் திருவிழா நாளில் பள்ளி வேட்டை நடைபெறுகிறது.
    விழா நிறைவு நாளான ஏப்ரல் 1 ஆம் தேதி காலை சுவாமி பவனி வருதல், திருவிலக்கு எழுந்தருளல், மாலையில் சுவாமி கருடவாகனத்தில் ஆறாட்டுக்கு மூவாற்றுமுகம் நோக்கி எழுந்தருளல் ஆகியன நடைபெறுகின்றன.
    முட்டப்பதியில்...
    கன்னியாகுமரி அருகேயுள்ள முட்டப்பதியில் ஆண்டுதோறும் பங்குனி மாதத் திருவிழா 11 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பால்கடலில் தீர்த்தம் ஆடச் செல்லுதல், அய்யாவுக்குப் பணிவிடை, அன்னதர்மம் ஆகியன நடைபெற்றது.
    விழா நாள்களில் உச்சிப் படிப்பு, உகப்படிப்பு, அன்னதர்மம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
    கலிவேட்டை: 8ஆம் நாள் திருவிழாவான மார்ச் 28ஆம் தேதி இரவு 8 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதியிலிருந்து ஒற்றையால்விளை, மாதவபுரம் ஊர்களைச் சுற்றி வலம்வந்து, நள்ளிரவு 12 மணிக்கு முட்டப்பதியின் வடக்கே கடலில் கலிவேட்டை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெறும்.
    11ஆம் நாள் விழாவையொட்டி ஏப். 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு அய்யா சப்பர வாகனத்தில் எழுந்தருளி பதியைச் சுற்றி வலம் வருதல் நடைபெறும். தொடர்ந்து அதிகாலை வரை திருஏடு வாசிப்பு நடைபெறும்.
    ஏற்பாடுகளை முட்டப்பதி தர்மகர்த்தாக்கள் கே.மனோகரச் செல்வன், கே.எம்.கைலாஷ் ஆகியோர் செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai