Enable Javscript for better performance
நாகர்கோவிலில் மீனவர்கள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) க.ரமேஷ் தலைமை வகித்தார்.
    கூட்டத்தில் மீனவச் சங்கப் பிரதிநிதிகள் பேசியது: கீழமணக்குடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் துறைமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்தப் பெண் மீனவக் கிராமமான மணக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அல்ல. பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோன்று செயல்பட்டுள்ளார். அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரினர். தொடர்ந்து அப்பெண்ணின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதோடு, கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
    பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் பேசியது: குமரி மாவட்டத்தில் அமைக்கப்படும் கடலரிப்புத் தடுப்புச் சுவர்கள் விரைவில் சேதமாகிவிடுகின்றன. கடற்கரைச் சாலைகளும் சேதமடைந்துள்ளன. சொத்தவிளை கடற்கரைச் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் கன்னியாகுமரியிலிருந்து கடற்கரை கிராமங்கள் வழியாக நீரோடி செல்லும் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சாலைகளை சீரமைத்து தொடர்ந்து பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
    மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பதிலளித்து கூறியது: முள்ளூர்துறை மீனவக் கடலோரப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை போடுவதற்கு தடை விதித்து பைங்குளம் ஊராட்சியில் அறிவிப்பு பலகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்துவது, கம்பிவலை அமைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    இனயம் புத்தன்துறையில் ஊராட்சிப் பணியாளர்கள் மூலம் கழிவு நீரோடை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மிடாலம் நடுத்துறையில் கடலில் நேர்கல் சுவர் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் பணிகள் செயல்படுத்தப்படும். ராஜாக்கமங்கலம் பகுதிகளில் 11 எல்.இ.டி. தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
    கூட்டத்தில், மீன்வளத்துறை துணை இயக்குநர் லேமக் ஜெயகுமார், உதவி இயக்குநர்கள் த.நடராஜன், அஜித் ஸ்டாலின் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மீனவப் பிரதிநிதிகள், மீனவக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai