Enable Javscript for better performance
"கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தில் கருத்து கூற அவகாசம் வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தில் கருத்து கூற அவகாசம் வேண்டும்'

    By DIN  |   Published on : 31st March 2018 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக கடலோர மண்டல மேலாண்மை திட்டம் குறித்து கருத்து கூறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    கன்னியாகுமரி மாவட்ட மீன்தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கே. அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார். 
    கூட்டத்தில், கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிக்கை 2011-ன்படி மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறையின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம், தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மை திட்டம் தயாரிக்கும் பணி சுற்றுச்சூழல் துறைக்கு வழங்கப்பட்டது. அதன்படி, சென்னையை சேர்ந்த நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (என்சிஎஸ்சிஎம்) மூலம் வரைவு திட்டம் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டது. 
    இந்த மையம் தயாரித்த வரைவு நகல், கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து கருத்துகூறக்கூடிய மீனவர்கள் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல் பல மீனவ கிராமங்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. மேலும், தற்போதைய வரைவு நகல் மீனவ மக்களுக்கு புரியாத வகையில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களில் கணிசமான பகுதியினர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இது விழா காலம் என்பதால், அவர்கள் இதில் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது.
    அத்துடன், தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவித்து மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடக்கும் சூழலில், மேற்கண்ட வரைவு நகல் குறித்து கருத்து கூற வழங்கப்பட்ட கடைசி தேதியான ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் கருத்து கூறுவது சாத்தியமானதல்ல. எனவே, கருத்து கூறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதோடு, வரைவு நகலை தமிழில் வெளியிட்டு கிராமம்தோறும் மீனவர்களின் கருத்தை கேட்டு, துல்லியமாக வரைவு நகல் தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
    கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். அந்தோணி, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் ஜி. செலஸ்டின், மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், மரிய ஜார்ஜ், சக்திவேல், சோரீஸ், மரிய ஜெயந்தன், ஆறுமுகம், கிருஷ்ணன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஜி. ஆல்பின், ஏ. மரிய ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai