Enable Javscript for better performance
புனித வெள்ளி: கிறிஸ்தவ ஆலயங்களில் திருச்சிலுவை வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    புனித வெள்ளி: கிறிஸ்தவ ஆலயங்களில் திருச்சிலுவை வழிபாடு

    By DIN  |   Published on : 31st March 2018 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புனித வெள்ளியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் திருச்சிலுவை புனித வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர் தினமாகும். உலக மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் உயிர்நீத்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து 3 ஆவது நாள் உயிர்த்தெழுந்தார். இதை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுவதே ஈஸ்டர் பண்டிகை. ஈஸ்டர் பண்டிகை நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 1) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகைக்கு முன்னர் கிறிஸ்தவர்கள் 40  நாள்கள் தவக்காலம் கடைப்பிடிப்பர். அதன்படி, கடந்த மாதம் (பிப்ரவரி) 14  ஆம் தேதி தவக்காலம் தொடங்கியது. அன்று சாம்பல் புதன் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. 
    கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) குருத்தோலை திருநாள் முதல் பெரிய வாரம் தொடங்கியது. இந்த நாளில் இயேசுவின் இறப்பை சித்தரிக்கும் வகையிலான நிகழ்வுகளும், அது தொடர்பான வழிபாடுகளும் கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்றன. தொடர்ந்து, வியாழக்கிழமை பெரிய வியாழக்கிழமையாக கடைப்பிடிக்கப்பட்டது. இதில், வியாழன் வழிபாடுகளும்,  இயேசு மரணத்தை தழுவும் முன்பு தனது சீடர்களுடன் கடைசி இரவு உணவை உண்ணும் சடங்கும், சீடர்களின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் ஆயர் நசரேன்சூசை இச்சடங்கை மேற்கொண்டார். அவர் சிறுவர், சிறுமிகளின் பாதங்களை கழுவினார். தொடர்ந்து, ஆலயங்களில் உள்ள நற்கருணை பேழைகள் மாற்றி வைக்கப்பட்டன. பிறகு, அனைத்து ஆலயங்களிலும் விடிய, விடிய  நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
    இந்த ஆராதனைகள் வெள்ளிக்கிழமை அதிகாலை 3  மணியுடன் நிறைவு பெற்றன. பிறகு, இயேசுவின் திருச்சிலுவை வழிபாடுகள் தொடங்கின. இதில், இயேசு  சிலுவையில் அறையப்பட்டு  உயிர்துறக்கும் நிகழ்வு சித்திரித்து காட்டப்பட்டது. கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப் பாதை வழிபாட்டை ஆயர் நசரேன்சூசை வழிநடத்தினார். இதேபோல, அசிசி ஆலயம், கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலம், குளச்சல் கா'ணிக்கை மாதா ஆலயம், தக்கலை எலியாசியார் ஆலயம், திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம், குலசேகரம் அகுஸ்தினார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் இந்த திருச்சடங்குகள் நடைபெற்றன. 
    குருசுமலையில் மலையடிவாரத்திலிருந்து மலை உச்சி வரை திருச்சிலுவை பயணம் நடைபெற்றது. இதில், குமரி மாவட்டம்  மற்றும் கேரள மாநிலத்திலிருந்தும் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மலை உச்சியிலுள்ள சிலுவையை வழிபட்டனர்.
    இதேபோல, சி.எஸ்.ஐ ஆலயங்களிலும் வெள்ளிக்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் ஹோம்சர்ச் உள்ளிட்ட ஆலயங்களில் இந்த பிரார்த்தனைகள் நடைபெற்றன.
    ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 1) நள்ளிரவு இயேசு உயிர்த்தெழும் சிறப்பு திருப்பலி நடைபெறும். இதுவரை துக்கம் அனுஷ்டித்த கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். இதை முன்னிட்டு, கிறிஸ்தவ ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஈஸ்டர் பண்டிகை சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பார்கள்.

    குலசேகரம், பேச்சிப்பாறை, குருசு மலையில்...
    புனித வெள்ளியையொட்டி, கிறிஸ்தவ ஆலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
    குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஆலய அருள்பணியாளர் சூசையன் தலைமை வகித்தார். இதில், காலையில் சிலுவைப் பாதை வழிபாடும், அதைத் தொடர்ந்து ஆராதனைகளும், பிற்பகலில் திருச்சிலுவைக்கு முத்தம் செய்தலும், தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான இறை மக்கள் பங்கேற்றனர். 
    சிஎஸ்ஐ ஆலயங்களில் மும்மணி பிரார்த்தனைகள், குலசேகரம் சிஎஸ்ஐ ஆலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கடைசி 7 வார்த்தைகளை உள்ளடக்கிய மும்மணிப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. மேலும், பெந்தெகொஸ்தே ஆலயங்களிலும்  சிறப்புக்  கூட்டங்கள் நடைபெற்றன.
    குருசு மலையில்...:  குருசுமலையில் புனித வெள்ளி சிறப்புத் திருப்பயணம் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, காலையில் மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு சிலுவைப் பாதை வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, நற்கருணை ஆராதனையும், திருப்பாடுகளின் தியானமும் நடைபெற்றது. மதியம் ஆனைப்பாறை பாத்திமா மாதா குருசடியிலிருந்து மலை அடிவாரத்திற்கு பரிகாரசிலுவை வழிபாடு நடைபெற்றது. பிற்பகலில் குருசுமலை இயக்குநர் வின்சென்ட் கே. பீட்டர் தலைமையில் இயேசுவின் திருப்பாடுகளின் நிறைவு ஆராதனை நடைபெற்றது. இதில் அருள்பணியாளர்கள் ஷாஜன் ஆன்டனி, ஷாஜி டி. சாவியோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். குருசுமலையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான  மக்கள் திருப்பயணம் செய்தனர். 
    சசி தரூர் எம்.பி. பங்கேற்பு: புனித வெள்ளி நிகழ்ச்சியையொட்டி, திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சசிதரூர் மற்றும் பாறசாலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஹரீந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று உரையாற்றினர்.
    பேச்சிப்பாறையில்...: பேச்சிப்பாறை சூசையப்பர் ஆலயத்தில் சிலுவைப் பாதை பவனி நடைபெற்றது. ஆலய அருள் பணியாளர் தாமஸ் குருசப்பன் தலைமையில் நடைபெற்ற இப்பவனி, சீரோ பாயின்ட் சந்திப்பிலிருந்து தொடங்கி, பள்ளிமுக்கு, டி.பி.ரோடு, கடம்பன்மூடு, காந்திநகர், கேம்ப்ரோடு வழியாக ஆலயத்தின் பின்புறமுள்ள மலைக்குன்றில் நிறைவடைந்தது.
    சூசையப்பர் ஆலயம் மற்றும் அதன் கிளை ஆலயங்களான வலியஏலா, கோதையாறு, ஆலம்பாறை ஆலயங்களிலிருந்து திரளான இறைமக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், அருள்பணியாளர், பெண்கள் உள்பட  வேண்டுதல் செய்திருந்தவர்கள் மரச்சிலுவையை சுமந்து செல்ல, ஆலய அருள்பணியாளர்களும் மக்களும் உடன் சென்றனர். பிறகு, ஆலயத்தில் ஆராதனை, சிலுவை முத்தம் மற்றும் திருப்பலி ஆகியன நடைபெற்றன.

    கருங்கலில்...
    கருங்கலில் உள்ள துண்டத்துவிளை புனித அந்தோனியார் ஆலயம் சார்பில் புனித கருணை மாதா மலை சிலுவை திருப்பயண பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இந்த ஆலயம் சார்பாக தொடர்ந்து 37 ஆண்டுகளாக செல்லும் இந்த புனித கருணைமாதா மலை கருங்கல் அருகே 3 கி.மீ. தொலைவில் உள்ள கருங்கல் மலையில் அமைந்துள்ளது. சுமார் 3 ஆயிரம் அடி உயரம் உள்ள இந்த மலையில் உள்ள தியான மையத்திற்கு பக்தர்கள் பேரணியாக ஆண்டுதோறும் சிலுவை சுமந்து தியானித்து 14 நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்து இயேசுவின் பாடுகளை சித்திரித்து நடித்துக் காட்டி செல்வர்.
    இந்த சிலுவை திருப்பயண பேரணி காலை 8 மணியளவில் ஆலய வளாகத்திலிருந்து தொடங்கி கருங்கல் காவல் நிலையம், ராஜீவ் சந்திப்பு, காமராஜர் சந்திப்பு, பேருந்து நிலைய முன்புறம்,நிர்மலா மருத்துவமனை வழியாக சுமார் 1 மணியளவில் மலையின் உச்சியில் உள்ள தியானமையத்திற்கு சென்றடைந்தது. தொடர்ந்து, அங்கு பக்தர்களுக்கு கஞ்சிகாச்சி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் மதவேறுபாடின்றி 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai