Enable Javscript for better performance
ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசிக்குப் பதில் பச்சரிசி: மக்கள் அதிருப்தி- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசிக்குப் பதில் பச்சரிசி: மக்கள் அதிருப்தி

    By DIN  |   Published on : 31st March 2018 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் புழுங்கல் அரிசி கிடைக்காதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    மக்கள் அன்றாட உணவுக்கு புழுங்கல் அரிசியை பயன்படுத்துவதே வழக்கம். குறிப்பாக, ஏழைகளின் நலன் கருதி 20 கிலோ புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
    இந்நிலையில், அண்மைக் காலமாக ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருள் சேமிப்பு கிடங்கிலிருந்து வழங்கப்படும் அரிசியில் 50 சதம் புழுங்கல் அரிசியாகவும், 50 சதம் பச்சரிசியாகவும் வழங்கப்படுகிறதாம்.
    இதனால்,  ரேஷன் கடைகளிலும் 50 சதம் குடும்ப அட்டைதார்களுக்கு புழுங்கல் அரிசிக்குப் பதிலாக  பச்சரிசியே கிடைப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
     குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் அரிசி வாங்கச் செல்லும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முழுமையாக பச்சரிசி மட்டுமே வழங்கப்படுகிறதாம்.  இதனால், உணவுக்கு பச்சரிசியை அதிகம் பயன்படுத்தாத மக்கள், வெளிச்சந்தையிலிருந்து  கூடுதல் விலைக்கு புழுங்கல் அரிசி வாங்கி பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
    இம்மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்துக்கும் ரேஷன் கடைகளுக்கு தலா 50 சதம் புழுங்கல், பச்சரிசி மூட்டைகளே வந்துள்ளனவாம். இதிலும் பெரும்பாலான கடைகளுக்கு 95 சதவிகித அளவிலேயே அரிசி வந்துள்ளது. கிராமப்புற பகுதி ரேஷன் கடைகளில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் ரேஷன் அரிசியையே நம்பியுள்ள நிலையில் கடைகளுக்கு அரிசி குறைவாக வருவதால்  அரிசி கிடைக்காமல் மக்கள் ஏமாற்றமடையும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. 
    இது குறித்து ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவர் கூறியது:
    ரேஷன் கடைகளில் மார்ச் மாத விநியோகத்திற்கு 50 சதம் புழுங்கல், அரிசியும் 50 சதம் பச்சரிசியும் வந்தது. இதில் முதலில் அரிசி வாங்க வந்த மக்களுக்கு புழுங்கல் அரிசி வழங்கப்பட்டது. பின்னர் வந்தவர்களுக்கு பச்சரிசி வழங்கப்பட்டது. ஏப்ரல் மாதத்திற்கும் இதுபோன்று தான் அரிசி வந்துள்ளது. மேலும் மொத்தம் வழங்கப்பட வேண்டிய அரிசியில் 95 சதம் அரிசி தான் கடைக்கு வந்துள்ளது என்றார். 
    இது குறித்து உணவு பொருள் வழங்கல் துறையினரிடம் கேட்ட போது, அரிசி கிடங்குகளுக்கு தற்போது 50 சதம் புழுங்கல் அரிசி 50 சதம் பச்சரிசி என்று தான் மூட்டைகள் வருகின்றன. இதன் படி ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் அரிசி விநியோகம் செய்யப்படுகிறது என்றனர். 
    இந்நிலையில், மாவட்டத்தில் புழுங்கல் அரிசி மட்டுமே கேட்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பச்சரிசி வழங்கக்கூடாது என குடும்ப அட்டைதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai