Enable Javscript for better performance
குமரியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    குமரி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறாமல் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமனஅலுவலர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
    மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஆர்.கருணாகரன் தலைமையில், காலாவதியான, தரமற்ற உணவுப் பொருள்களை உண்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடைகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி கன்னியாகுமரியில் நடைபெற்றது. 
    குமரியில் 5 பிரிவுகளாக உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பிரவின்ரகு,  ரஞ்சித்குமார்,  சிதம்பர தாணுபிள்ளை,சிதம்பரம்,  அஜய்குமார் ஆகியோர் மேற்பார்வையில் புனித ஜோசப் செவிலியர் கல்லூரி மாணவிகள் கடைகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினர்.
    இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமனஅலுவலர் ஆர்.கருணாகரன் கூறியது: காலாவதியான மற்றும் தரமற்ற உணவுப் பொருள்களை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு இருந்தாலும் பாதிக்கப்பட்ட நுகர்வோர் யார் மீதும் புகார் செய்ய முன்வருவதில்லை. இதைப் போக்கும் வகையில் இங்குள்ள கடைகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் இருக்கும் செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இங்குள்ள பல கடைகள் உணவுப் பாதுகாப்பு உரிமம் இல்லாமல் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai