மரபை காக்க மக்கள் திரண்டது பெரிய புரட்சி: தமிழிசை சௌந்தரராஜன்

இந்து மத நம்பிக்கைகளையும், பண்பாட்டையும் காக்க உயிரைக் கூட துச்சமாக மதிக்கும் பெண்கள் இருக்கும் வரை சபரி

இந்து மத நம்பிக்கைகளையும், பண்பாட்டையும் காக்க உயிரைக் கூட துச்சமாக மதிக்கும் பெண்கள் இருக்கும் வரை சபரி மலையில் 10 முதல் 50 வயது பெண்களை அனுமதிக்கும் முயற்சி நடக்காது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசினார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, குமரி மாவட்டம், அருமனையில் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது:
சபரிமலை செல்வதற்கு ஆண்களைப் போல பெண்களுக்கும் உரிமை கொடுக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் சொல்லும்போது, அந்த உரிமை எங்களுக்குத் தேவையில்லையென, மரபை காக்க மக்கள் ஒன்று திரண்டிருப்பது பெரிய புரட்சி. நமது போராட்டங்கள் உச்சநீதிமன்றத்தின் காதுகளை எட்டவேண்டும்.
இந்துக்களின் நம்பிக்கைகள் அறிவியல் சார்ந்தவை. ஒரு பெண்ணாக மட்டுமல்ல, ஒரு மருத்துவராகவும் சொல்கிறேன். சபரிமலையில் பத்து வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிப்பது கூடாது. இங்குள்ள பல அரசியல் கட்சிகளுக்கு இந்துக்களின் ஓட்டுக்கள் மட்டும் வேண்டும். ஆனால், இந்துக்களின் உணர்வுகளை அவர்கள் மதிக்கமாட்டார்கள். பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறோம் என்று சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் அரசியல் தலைமைக் குழுவில் எத்தனை பெண்களுக்கு இடம் கொடுத்திருக்கிறது  என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சபரிமலை பாதுகாப்பு இயக்கத் தலைவர் கே.எஸ். முருகன் தலைமை வகித்தார். இதில் பாஜக மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில நிர்வாகி குழிச்சல் செல்லன் மற்றும் பாஜக நிர்வாகிகள் தர்மராஜ், மோகன்தாஸ், சுஜி, ராமசந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, சபரிமலையைக் காப்போம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறியது: இயற்கையாகவே பெண்கள் சபரிமலைக்கு செல்வது அனுமதிக்கப்படவில்லை. பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com