குமரியில் தொடர் மழை எதிரொலி: ரப்பர் மரங்களில் இலையுதிர்வால் பால் உற்பத்தி பாதிப்பு

குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, ரப்பர் மரங்களில்  திடீர் இலையுதிர்வு ஏற்பட்டு பால் உற்பத்தி வீழ்ச்சியுற்றது.

குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, ரப்பர் மரங்களில்  திடீர் இலையுதிர்வு ஏற்பட்டு பால் உற்பத்தி வீழ்ச்சியுற்றது. இதனால், ரப்பர் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நிகழாண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, மழை ஓய்வடையும் ஆகஸ்ட் மாதத்திலும் பலத்த மழை பெய்தது. அதாவது, இந்த ஒரு மாதத்தில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக 4 மடங்கு கூடுதல் மழை பெய்தது.
இந்த மழை ரப்பர் மரங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  அசாதாரண சீதோஷண நிலையால், மரங்களில்   இலைகள் பெருமளவு உதிர்ந்தன. குறிப்பாக, மலேசிய இனங்களான  பி.பி. 28/59 மற்றும் ஆர்.ஆர்.ஐ.எம் 600 ஆகிய ரகங்களைச் சேர்ந்த ரப்பர் மரங்களில் அதிக இலையுதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால்,  மரங்களில் பால் உற்பத்தி கடுமையாக குறைந்து ரப்பர் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
இது குறித்து குமரி மாவட்ட சிறு ரப்பர் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி ஜி. கிருஷ்ணன் நம்பூதிரி கூறியதாவது:  பொதுவாக ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில்தான் ரப்பர் மரங்களில் குளிர்கால  இலையுதிர்வு ஏற்படும். பின்னர், ஜனவரி இறுதி, பிப்ரவரி தொடக்கத்திலேயே இலைகள் துளிர் விட்டுவிடும்.
அதன்பிறகு, ஜூன் மாதத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் மரங்களில் அசாதாரண இலையுதிர்வு ஏற்படும். இதைத் தடுக்க பெரும்பாலான தோட்டங்களில் ரப்பர் விவசாயிகள் மரங்களில் காப்பர் ஆக்சி குளோரைடு அமிலக் கரைசலை தெளிப்பான் மூலம் தெளிப்பதுண்டு.
ஆனால், நிகழாண்டு இயல்புக்கு மாறாக ஆகஸ்ட் மாதத்தில் பலத்த மழை பெய்ததால் மரங்களில் இலையுதிர்வு ஏற்பட்டு  மூன்றில் ஒருபங்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை  காரணமாக பால்வடிப்பும், இலையுதிர்வால் பால் உற்பத்தியும் முடங்கிப்போனதால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். 
இது குறித்து ரப்பர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியது:
ஆகஸ்ட் மாத மழைக்கு இந்திய இனங்களான ஆர்.ஆர்.ஐ.எம். 104 மற்றும் 430 போன்ற இனங்களில் இலையுதிர்வு ஏற்படவில்லை. கேரளத்திலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. இது போன்ற இலையுதிர்வு ஏற்படாமல் இருக்க, மழைக் காலத்திற்கு முன்பு மரங்களில் காப்பர் ஆக்சி குளோரைடு கரைசலை தெளிப்பது சிறந்த அணுகுமுறை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com