புழல் சிறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்திய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர்


சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்திய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை தூய்மைப்பணியை தொடக்கி வைத்த பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நாடு முழுவதும் அதிகாரிகள், தன்னார்வத் தொண்டர்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைத்துத் தரப்பினரும் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களிலும் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவீத வெளிப்புற கழிவறை இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
சென்னை புழல் சிறைக்குள் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்திய விவகாரத்தில், தவறு செய்த அதிகாரிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். சிறைத்துறை அதிகாரிகளை மாற்றம் செய்வதுடன் நடவடிக்கையை முடித்துவிடக் கூடாது. வேலூர் டாக்டர் ரெட்டி கொலை உள்ளிட்ட பல்வேறு சதித்திட்டங்கள் சிறையில்தான் தீட்டப்பட்டன. எனவே இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அதே நேரத்தில், இந்தக் கொலையால் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள மகளிர் காவல்துறை அதிகாரி அண்மையில் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியை பார்த்திருப்பீர்கள். இவ்வாறு, கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது என இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆகியோர் கூறுகிறார்கள். அதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின் போது குமரி மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் முத்துராமன், பொருளாளர் தர்மலிங்க உடையார், மேலிட பார்வையாளர் தேவ், நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ், நாகர்கோவில் நகர பாஜக தலைவர் நாகராஜன், முன்னாள் தலைவர் ராஜன், மகளிர் அணி உமாரதி ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com