குமரியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது
By DIN | Published On : 01st April 2019 01:59 AM | Last Updated : 01st April 2019 01:59 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் நிலவும் இயல்பான வெப்பத்தை விட நிகழாண்டு வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது. இதனால் நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. தண்ணீரின்றி பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன.
நீர் நிலைகளைத் தேடி அலையும் சுற்றுலாப் பயணிகள்: வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. அதே வேளையில் மற்றொரு சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் ஏராளமான அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் அருவிக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
அதே வேளையில் தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தால் அவர்கள் உற்சாகமாக குளிக்க முடியாத நிலை காணப்பட்டது. அதே வேளையில் சிறார் நீச்சல் குளத்தில் சிறார்களுடன் பெண்களும் நீச்சலடித்து மகிழ்ந்ததைக் காணமுடிந்தது.