பணப் பட்டுவாடாவைத் தடுக்க நடவடிக்கை எடுத்தால் தோல்வி பயம் என்பதா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க நடவடிக்கை எடுத்தால் தோல்வி பயம் என்பதா என்று

தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க நடவடிக்கை எடுத்தால் தோல்வி பயம் என்பதா என்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து  சுசீந்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் பணத்தை குவித்து வைப்பார்கள். அவற்றை விநியோகமும் செய்வார்கள். அதைத் தடுத்தால் தேர்தலில் தோல்வி பயம் என்று கூறுவார்கள். ஊரை அடித்து உலையில் போடும் வேலையில் ஈடுபட்டால் அதைத் தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
பணப் பட்டுவாடா பல இடங்களிலும் நடக்கிறது. குமரி மாவட்டத்திலும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, இலவசப் பொருள்கள் கொடுக்கும் செயல்கள் நடைபெறுகின்றன. இதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அவரது நிறுவனங்களில் வைத்து பணப் பட்டுவாடா செய்வதாக தகவல் வருகிறது. இது தொடர்பாக சோதனை நடத்த வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதம் மற்றும் ஜாதிய உணர்வுகளை தூண்டும் வகையில் காங்கிரஸ் கட்சி பொய்யான பிரசாரங்களை செய்து அரசியல் ஆதாயம் தேடி வருகிறது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். 
அழகிய மண்டபத்தில்...
அழகியமண்டபத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் பேசியது: கடந்த முறை 1 லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை நீங்கள் வெற்றிபெற வைத்தீர்கள். அதற்காக நான் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சிப் பணிகளை உங்கள் காலடியில் சமர்ப்பித்திருக்கிறேன். மத்திய அரசு குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்த திட்டங்களை நான் புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.
கடந்த முறை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் எனக்கு வாக்களித்தார்கள். இந்த முறையும் மீனவர்களின் ஓட்டு எனக்கு தேவை. அவர்களின் வாழ்க்கைக்கு தேவையானதை செய்து கொடுக்க நான் விரும்புகிறேன்.
எட்டாவது முறையாக தேர்தலில் நிற்கிறேன். 5 முறை தோற்றிருக்கிறேன். இந்த மாவட்டத்தை விட்டு ஓடிப்போகவில்லை. வென்றாலும், தோற்றாலும் இங்குதான் இருப்பேன் என்றார்.
பிரசாரத்தில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஏ.அசோகன்  மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com