வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஒட்டும் பணி
By DIN | Published On : 09th April 2019 05:35 AM | Last Updated : 09th April 2019 05:35 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் ஒட்டும் பணி தொடங்கியது. இப்பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி ஆகியவை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கணினி மூலம் கலக்கல் முறையில் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. 2 ஆம் கட்டமாக கலக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு கருவி ஆகியவை இம்மாதம் 5 இல் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையடுத்து, 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. நாகர்கோவில், குளச்சல் மற்றும் கிள்ளியூர் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் ஒட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பார்வையிட்டார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, சார் ஆட்சியர்கள் பா.விஷ்ணு சந்திரன், (நாகர்கோவில்), ஷரண்யா ஹரி (பத்மநாபபுரம்), உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதிக் தயாள், உதவி ஆணையர் (கலால்) சங்கரலிங்கம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (குளச்சல்) எஸ்.கிறிஸ்டோபர் ஜெயராஜ், வட்டாட்சியர்கள் அனில்குமார்(அகஸ்தீஸ்வரம்), ராஜாசிங் (கல்குளம்)கோலப்பன் (கிள்ளியூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.