அனைத்து தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெல்லும்: முகுல்வாஸ்னிக்

தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர்


தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் முகுல்வாஸ்னிக் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: ஐந்து ஆண்டுகால  மோடியின் ஆட்சியில் நாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பாஜக ஆட்சிக் காலம் இந்தியாவின் இருண்ட காலம். அனைத்துத்துறைகளும் மோடியின்ஆட்சியில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. கருப்பு பணம் மீட்பு, ஆண்டுக்கு 2 கோடி  இளைஞர்களுக்கு வேலை போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.   பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் முதல் கட்டமாக நடைபெற்ற 91 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்.  நாட்டு மக்கள் பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டனர். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும் போது, தமிழகத்திலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.  தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். 
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வரும் 2020  ஆம் ஆண்டுக்குள் நாட்டில் பல்வேறுதுறைகளில் காலியாக இருக்கும்  22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.  மத்திய அரசில் புதிதாக தொழில்சேவை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புத்துறை  உருவாக்கப் படும். விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை, மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும். 
பயிர்க் காப்பீடு செய்வதில் காணப்படும் குளறுபடிகள் களையப்பட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மறுசீரமைப்பு செய்வதுடன் வரிகள் குறைக்கப்படும். நியாய்  திட்டத்தின் மூலம் 5 கோடி பேர் பயன் பெறுவர்  என்றார் அவர்.
பேட்டியின் போது,  காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய்தத், தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூராஜெயகுமார், செய்திதொடர்பாளர் ரமணி, நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com