குமரி மாவட்டத்தில் குருத்தோலை பவனி

குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ  ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.  கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறு


குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ  ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.  கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறு தினமாக கடைப்பிடிக்கின்றனர்.
இதையொட்டி, குமரி மாவட்டத்தில் கத்தோலிக்கம், சிஎஸ்ஐ, ரட்சணியசேனை உள்ளிட்ட அனைத்து சபை ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆலய வளாகங்கள், வீதிகள் தென்னங்குருத்தோலைகளால் அலங்காரம் செய்யப்பட்டதுடன்,  இறைமக்கள் அருள்பணியாளர்கள் தலைமையில் வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். 
பின்னர் ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு தின சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இத்திருப்பலியில் இயேசுவின் சிலுவைப் பாடுகள் அடங்கிய வேதாகமப் பகுதிகள் வாசிக்கப்பட்டு, மறை உரைகள் நிகழ்த்தப்பட்டன.
கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலத்தில் குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து வரும் 7 நாள்கள் முக்கியமானவையாகும். இந்த 7 நாள்கள் அடங்கிய வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 
புனித வாரத்தில் வரும் வியாழக்கிழமை பெரிய வியாழனாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று ஆலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று சிலுவைப் பாதை வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன.
காரங்காடு, சுங்கான்கடை, தக்கலை பகுதியில்...
காரங்காடு, சுங்கான்கடை, தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி மற்றும் கூட்டுத் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி நுள்ளிவிளை தூய அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற தொடக்க வழிபாட்டில், விக்டர், களரி மக்கள் பண்பாட்டு மைய இயக்குநர்  ஜாய், நுள்ளிவிளை கார்மல் ஆலய பங்குத்தந்தை ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். 
சிறப்பு வழிபாட்டுக்கு பின்னர் குருத்தோலை புனிதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து குருத்தோலை பவனி நடைபெற்றது. இப்பவனி காரங்காடு தூய  ஞானபிறகாசியார் ஆலயத்தை அடைந்ததும், விக்டர் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
பவனியில், நுள்ளிவிளை கார்மல் அன்னை ஆலயம்,  தூய அந்தோணியார் ஆலயம்,  குழிவிளை புனித  மிக்கேல் முதன்மை தூதர் ஆலய பங்குப் பேரவை நிர்வாகிகள், இறைமக்கள் பங்கேற்றனர். 
இதுபோல் நுள்ளிவிளை கார்மல் அன்னை ஆலயத்தில் ராஜேஷ், கண்டன்விளை அன்னை தெரசாள் ஆலயத்தில் சகாய ஜெஸ்டஸ்,  மாடதட்டுவிளை செபஸ்தியார் ஆலயத்தில்  ஜெயகுமார்,  கொன்னகுழிவிளை வியாகுல அன்னை ஆலயத்தில் பிரான்சிஸ் சேவியர், ஆலன்விளை லூர்து அன்னை ஆலயத்தில் சிம்சராஜ், மைலோடு மிக்கேல்  முதன்மை தூதர் ஆலயத்தில் ஐசக்ராஜ், முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தில் டோமினிக்  கடாட்சதாஸ்,  ஸ்டீபன், தக்கலை எலியாசியார் ஆலயத்தில் மரிய டேவிட், சுங்கான்கடை அந்தோணியார் ஆலயத்தில் குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில், ஜெயபிரகாஷ், மரியவில்லியம், பிரம்மசிங் ஆகியோர் பங்கேற்ற திருப்பலி நடைபெற்றது.   
ஏப். 18ஆம் தேதி புனித வியாழனையொட்டி பாதம் கழுவுதல், 19ஆம் தேதி புனிதவெள்ளி திருச்சிலுவை  பாதை வழிபாடு, 20ஆம் தேதி பாஸ்கா திருவிழிப்பு  திருப்பலி ஆகியவை நடைபெறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com