சுடச்சுட

  

  வாக்குச்சாவடி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 17th April 2019 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத்  தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெறுவதையொட்டி,  வாக்குச்சாவடிகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக  அரசியல் கட்சிகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரே செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
  நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து,  ஆட்சியர் பேசியது:
  மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப். 18ஆம் தேதி காலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை வேட்பாளர்கள் தேர்தல் ஆணைய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் ஒரு மேஜை, 2 நாற்காலிகள் போடும் அளவுக்கு, சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப  குடை, தார்பாய் அல்லது துணியை பயன்படுத்தி தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைத்துக் கொள்ளலாம்.
  வாக்குச்சாவடிக்குள் செல்லும் கட்சி முகவர்கள், செல்லிடப்பேசியை எடுத்துச் செல்லக்கூடாது.  வேட்பாளர்களோ அல்லது அவரது முகவர்களோ வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவது அல்லது கொண்டு செல்வது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம். மாலை 3 மணிக்குப் பின் தேர்தல் ஆணையத்திடம் சான்று பெற்றவர்கள், தேர்தல் பணி அலுவலர்கள் மட்டுமே வாக்குச்சாவடியினுள் அனுமதிக்கப்படுவர். 
  முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வருகை தரும் போது அவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். உடன் வருவோருக்கு அனுமதியில்லை. வாக்குச்சாவடி முகவர்கள் யாரேனும் ஒருவர் மாறும்போது பதிவேட்டில் கையெழுத்திட்டு மாற்று முகவரை பிற்பகல் 3 மணிவரை மட்டுமே நியமிக்கலாம். வேட்பாளர்கள் 6  சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தொகுதி வாரியாக ஒரு முகவரை நியமிக்கலாம். வேட்பாளரோ, அவரது முகவரோ வாக்குச்சாவடிக்கு வாகனத்தில் வரும்போது, வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் முன்னதாகவே வாகனத்தை நிறுத்திவிட்டு வாக்குச்சாவடிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். வாக்குச்சாவடி முகவரின் வாக்காளர் அட்டை ஆய்வு செய்யப்படும். குற்றப்பின்னணி உள்ளவராக இருந்தால் அனுமதி கிடையாது. வெளி மாவட்ட, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏப்.16க்குப் பின் தொகுதிக்குள் தங்கியிருக்கக் கூடாது.  வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்குச்சாவடிக்குள் உணவுகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்றார் அவர். 
  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, பத்மநாபபுரம் சார்ஆட்சியர் ஷரண்யாஅறி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.சுகன்யா,  அரசியல் கட்சி பிரமுகர்கள் லீனஸ்ராஜ் (திமுக), சேவியர் ஜெயசதீஸ் (காங்கிரஸ்)  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai