குமரி கடலோரக் கிராமங்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற காங்கிரஸ் திட்டம்: பொன். ராதாகிருஷ்ணன் புகார்
By DIN | Published On : 17th April 2019 09:01 AM | Last Updated : 17th April 2019 09:01 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களான சின்னமுட்டம், கோவளம், கொட்டாரம், தென்தாமரைகுளம், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், கொட்டாரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காங்கிரஸ் கட்சி தனது முழு பண பலத்தையும் காட்டிவருகிறது. ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை மூலதனமாக வைத்து கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற காங்கிரஸ் முயற்சி செய்கிறது. கேரளத்தில் இருந்து படகுகள் மூலம் மதுவை கடத்திவந்து கடலோரக் கிராமங்களுக்கு விநியோகம் செய்வதாக தகவல் வருகிறது. அதோடு, கடலோரக் கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளை கைப்பற்றி, காங்கிரஸ் கட்சிக்கு வலுக்கட்டாயமாக வாக்களிக்க வைக்க நடவடிக்கையில் இறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நான் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
பிரசாரத்தில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஏ. அசோகன், குமரி மாவட்ட பாஜக தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் முத்துராமன், நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...