வாக்குச்சாவடிக்கு மாற்றுத் திறனாளிகளை அழைத்துவர வாகன வசதி ஏற்படுத்தப்படும்: ஆட்சியர்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது என்றார் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரே.
மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஏப். 18 ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இத்தொகுதியில் 1,694 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் 791 வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு விடியோவில் பதிவு செய்யப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். 
அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குப்பதிவு செய்வதற்கான  வாக்குச்சாவடி சீட்டு வழங்கிக் கொண்டிருக்கிறோம். மாவட்டத்தில் 8,582  அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவர். அவர்களுக்கு புதன்கிழமை 4 ஆம் கட்ட பயிற்சி அளித்து வாக்குச்சாவடிக்கு அனுப்பிவைக்கப்படுவர். வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வாக்குச்சாவடிகளில் புதன்கிழமை மாலைக்குள் நிறைவு செய்யப்படும். 
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் வாக்களிக்க  முன்னுரிமை அளிக்கப்படும். 
டோக்கன் விநியோகம்: மாற்றுத் திறனாளிகளை வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் 1950  என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.  கடந்த தேர்தலில் 67 முதல் 68 சதவீதம்தான் வாக்குப்பதிவாகியது. இந்தத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெயிலின் சிரமத்தை தவிர்க்க வாக்காளர்கள் ஏப்.18 ஆம் தேதி காலையிலேயே வந்து தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும். கடைசி நேரத்தில் மாலை 6 மணிக்குள் வாக்குப்பதிவு மையத்துக்கு வருபவர்களுக்கு டோக்கன் அளிக்கப்படும்.   
ரூ.2.21 கோடி திரும்ப ஒப்படைப்பு:  அரசியல் கட்சிகளால் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 3,708  கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ,. 2 கோடியே 42 லட்சத்து 65 ஆயிரத்து 761 பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 2 கோடியே 21 லட்சத்து 43  ஆயிரத்து 61  திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரூ.64 லட்சத்து 8 ஆயிரம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 22 லட்சத்து 50 ஆயிரம் தொடர்பாக வருமான வரித்துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது  என்றார் அவர்.
பலத்த பாதுகாப்பு:  இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீநாத் கூறியது: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 71  வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.  தொகுதி முழுவதும் 1,664 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், 5 கம்பெனி மத்திய ரிசர்வ் காவல் படையினர் 370 பேர்  மாவட்டத்துக்கு வந்துள்ளனர். 
மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள  39 வாக்குச்சாவடிகளில் 4 கம்பெனி மத்திய படையினர் நிறுத்தப்படுகின்றனர்.  560 முன்னாள் ராணுவ வீரர்கள் , 384 ஊர்க்காவல் படையினர்,  400 என்எஸ்எஸ் மாணவர்கள் என  மொத்தம் 3,358 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 
மாவட்டத்திலுள்ள  33 காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் தலா ஒரு ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  வாக்கு எண்ணும் மையத்திலும் 24 பேர் கொண்ட குழு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.சுகன்யா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ஷரண்யாஅறி ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com