வாக்காளர்கள் நீக்கம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திமுக, மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
By DIN | Published On : 23rd April 2019 09:51 AM | Last Updated : 23rd April 2019 09:51 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலர் என்.சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் நீக்கம், வாக்குச்சீட்டு வழங்காதது போன்றவற்றால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையால் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 50 சதவீத வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வழங்காததும் வாக்குப்பதிவு குறைய காரணமாகும். திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், வாக்ககாளர் பட்டியலுடன் இணைக்கப்பட்ட துணைப் பட்டியல் பல வாக்குச்சாவடிகளுக்கு வழங்கவில்லை.
இதனால், இளம் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை செலுத்த முடியாமல் போனது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய அதிகாரிகள், வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் திரும்பிச் சென்றது குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?.
40 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டது, வீடு வீடாக வாக்குச்சீட்டு வழங்காதது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் 2 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய நாள்களில் பல முறை மாவட்ட வருவாய் அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், வாக்குச்சீட்டில் வாக்குப்பதிவு நேரம் தவறுதலாக காலை 7 முதல் இரவு 8 மணி வரை என பிரசுரம் செய்து விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால், வாக்காளர்கள் இரவு 7 மணிக்கு பிறகும் வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். எனவே, குமரி மாவட்டத்தில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டச் செயலர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில் 2014 மக்களவைத் தேர்தல், 2016 இல் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் வாக்களித்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர், ஏப். 18 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. தூத்தூர், இனயம் உள்ளிட்ட மீனவக் கிராமங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளனர்.
இது அரசியல் உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையமும் , அதிகாரிகளும் செயல்பட்டிருப்பதை காட்டுகிறது. தேர்தல் ஆணையம், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.