முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குளச்சலில் கணவாய் மீன்' சீசன் தொடக்கம்
By DIN | Published On : 04th August 2019 01:01 AM | Last Updated : 04th August 2019 01:01 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கணவாய் மீன்' சீசன் களை கட்டத் தொடங்கியதை அடுத்து கொள்முதல் செய்ய கேரள வியாபாரிகளின் வருகையால் மீன் விலை உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரைப் பகுதிகளான குளச்சல், முட்டம், தேங்காய்ப்பட்டினம் பகுதியில் கடந்த 2 மாத காலமாக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. தடைக் காலம் முடிவடைந்த நிலையில் இம்மாதம் 1 ஆம் தேதி விசைப் படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வருகைக்காக வியாபாரிகள் காத்திருந்தனர். இந்நிலையில்கட்டுமரம், வள்ளம் நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலைகளில் ஏற்றுமதி ரகமான கணவாய் மீன்கள்' பிடிபட்டு வருகின்றன.
கேரள மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு மீன்களை ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்கள் இந்த கணவாய் மீன்களை வாங்குவதற்காக குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் முகாமிட்டுள்ளனர்.
இந்த கணவாய் மீன்களை வாங்குவதற்கு ஏற்றுமதி நிறுவனங்களிடையே கடும் போட்டியும் நிலவுகிறது. இந்த மீனுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 290 முதல் ரூ. 350 வரை விலை கிடைக்கின்றது. ஒரு கணவாய் மீன் 4 கிலோ வரை எடை இருப்பதால் மீன் ஒன்றின் விலை ரூ. 1000 க்கும் அதிகமாக கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.