போக்சோ சட்டப் புகார்களை விரைந்து விசாரிக்க காவல் துறை அதிகாரிகள் குழு அமைப்பு: எஸ்.பி. ஸ்ரீநாத்
By DIN | Published On : 04th August 2019 01:00 AM | Last Updated : 04th August 2019 01:00 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம் விரைந்து விசாரணை நடத்துவதற்காக காவல் துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத்.
குமரி மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட குழந்தைககள் பாதுகாப்பு அலகு சார்பில், பெண் குழந்தைகளை பாலியல் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் கொடியசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக அவர் பேசியது:
போக்சோ சட்டம் மற்றும் சைல்டு லைன் குறித்து மாணவிகள் தெரிந்துகொள்வதற்காகவும், தங்களுக்கு ஏதேனும் தொல்லைகள் வந்தால், இவற்றின் உதவியை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தப் பேரணி நடைபெறுகிறது.
18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகள், சிறுமிகள் கவனமாக இருக்க வேண்டும். தவறு நடந்தால், அதை சட்டப்படி எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். சைல்டு லைன் உதவி எண் 1098-க்கு அவர்கள் தொடர்புகொண்டு புகார்செய்யலாம். புகார் அளிப்பவர்களின் பெயர்கள் வெளியிடப்படாது.
குமரி மாவட்டத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ள உதவிக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், உதவிக் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயபாஸ்கர் (நாகர்கோவில்), கார்த்திக் (குளச்சல்), அல்போன்சா பள்ளித் தாளாளர் சனில்ஜான், முதல்வர் லிஸ்பெத், ஆசிரியை ஜாஸ்மின், காவல் ஆய்வாளர் சாய்லட்சுமி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...