மாணவர்கள் கிராமங்களில் மருத்துவச் சேவை செய்ய வேண்டும்'
By DIN | Published On : 04th August 2019 12:58 AM | Last Updated : 04th August 2019 12:58 AM | அ+அ அ- |

மாணவர்கள் கிராமங்களுக்கு சென்று ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை செய்ய வேண்டும் என அரசு மருத்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவில், ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் நடைபெற்ற கிராம சுகாதார செவிலியர் படிப்பு முதலாண்டு தொடக்க விழாவுக்கு கல்லூரித் தலைவர் அருள்கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அருள்ஜோதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கலந்துகொண்டு பேசியது: மருத்துவ சேவை என்பது தெய்வீகப் பணி. நோயாளிகள் மருத்துவர் வடிவில் இறைவனை காண்கின்றனர். மருத்துவப் பணியை சேவையாக கருதினால்தான் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் கிராமங்களுக்கு சென்று ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவையாற்ற வேண்டும் என்றார் அவர்.
ரோஜாவனம் கல்வி குழும அறங்காவலர்கள் புலவர் ரத்தினசாமி, பார்வதி ரத்தினசாமி, அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் அருணாச்சலம், சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரி முதல்வர் லியாகத்அலி, மனநல மருத்துவர் நாகராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
செவிலியர் கல்லூரி முதல்வர் புனிதா வயலட் ராணி வரவேற்றார். நிர்வாக அலுவலர் நடராஜன்அறிக்கை வாசித்தார். கிராம சுகாதார செவிலியர் படிப்பில் சேர்ந்த மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றி மருத்துவச் சேவையாற்ற உறுதிமொழி எடுத்தனர். இதில் பேராசிரியர்கள் செல்வ சிபியா, பரமேஸ்வரி, செல்லம்மாள், அய்யப்பன், துரைராஜ், சிவதாணு, மரியஜான், பகவதி பெருமாள், கார்த்திக், சாம் ஜெபா, லிட்வின் லூசியா, கண்காணிப்பாளர் மோசஸ், அலுவலகச் செயலர் சுஜின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.