லேப் உதவியாளர் பணிக்கு லஞ்சம்: மருத்துவ துணை இயக்குநருக்கு 4 ஆண்டு சிறை

மருத்துவத் துறையில் லேப் உதவியாளர் பணி நியமனம் செய்ய லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவப் பணிகள் துணை இயக்குநருக்கு


மருத்துவத் துறையில் லேப் உதவியாளர் பணி நியமனம் செய்ய லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவப் பணிகள் துணை இயக்குநருக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 
தமிழகத்தில் 2009 -இல் மருத்துவத்துறையில் லேப் உதவியாளர் பணியிடத்துக்கு ஆள் தேர்வு செய்ய அறிவிக்கப்பட்டது.  
அப்போது நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் துணைஇயக்குநராக (காசநோய்) பணியில் இருந்த செந்தில்வேல்முருகன் (65), பணியாளர்களை நியமனம் செய்ய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிலரிடம் இருந்து பல லட்சம் வசூல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனிடையே, 2009 -ஆம் ஆண்டு செப்.  9 -இல் வசூல் செய்த பணத்துடன் அவர் ரயில் மூலம் சென்னைக்கு செல்ல இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழி மறித்து, அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது, செந்தில்வேல்முருகனிடம் ரூ.  21 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  
இதில், ரூ. 19.35 லட்சத்துக்கு  கணக்கு விவரம் தெரிவித்த செந்தில்வேல்முருகன், எஞ்சியுள்ள ரூ. 1.65 லட்சத்துக்கு விளக்கம் அளிக்கவில்லையாம். 
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், செந்தில்வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் முதன்மை குற்றவியல்  நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அருணாச்சலம், லேப் உதவியாளர் பணி நியமனம் செய்வதற்காக செந்தில்வேல்முருகன் லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4 லட்சம் அபராதமும் விதித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com