"டிஜிட்டல் ஸ்போர்ட்ஸ்' பல்கலைக்கழகம்: தொழில்நுட்ப வல்லுநர்கள் அரசுக்கு பரிந்துரை

விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல டிஜிட்டல் ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்

விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல டிஜிட்டல் ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கன்னியாகுமரியில் நடைபெற்ற உலகளாவிய டிஜிட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்ற கருத்தரங்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
உலக டிஜிட்டல் விளையாட்டு அமைப்பின் (ஐ.ஏ.எஸ்.ஐ.) சார்பில் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் விளையாட்டு மற்றும் விளையாட்டுக் கல்வி என்ற தலைப்பில் சர்வதேச 2 நாள் கருத்தரங்கம் கன்னியாகுமரியில் நடைபெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற நிறைவுநாள் நிகழ்ச்சிக்கு, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.சந்தோஷ்பாபு தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.செல்லத்துரை, தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனத் தலைவர் சேகர் ஜே.மனோகரன், விஷ்வாக் அமைப்பின் திட்ட மேலாளர் ஏ.பி.ஜே.எம்.ஜே.ஷேக்தாவூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து உலக டிஜிட்டல் விளையாட்டு அமைப்பின் இந்திய தலைவர் ரிபுரஞ்சன் சின்ஹா, செயலர் சண்முகநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: சாதாரணமாக இருந்த விளையாட்டுகள் அனைத்தும் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் விளையாடப்பட்டு வருகிறது. எனவே, நமது நாட்டில் டிஜிட்டல் ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். மேலும், மாநிலம் தோறும் தேசிய டிஜிட்டல் விளையாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும். இந்தக் கருத்துகளை மத்திய, மாநில அரசுகளுக்கு நேரடியாக பரிந்துரை செய்ய உள்ளோம்.
விளையாட்டுக் கல்வி, பி.இ. என்ஜினியரிங் போன்று பி.இ. ஸ்போர்ட்ஸ் என மாற்றம் செய்யப்பட்டு படிக்கும் காலம் வரும். அப்படி வரும் போது விளையாட்டின் மீது மோகமும், வேலைவாய்ப்பும் அதிகரிப்பது உறுதி. 
அதேபோல் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வேலை கிடைக்கும் அளவுக்கு டிஜிட்டல் ஸ்போர்ட்ஸ் பாடத் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
தற்போது பல பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லாத நிலை உள்ளது. உடற்கல்வி ஆசிரியர்களுக்கென தனியாக அறைகூட ஒதுக்கப்படுவது இல்லை. கல்வி நிறுவனங்கள் விளையாட்டு ஆசிரியர்கள் நியமிப்பதை தவிர்த்து, தனியார் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. இதனால் பள்ளிகளில் உடற்கல்வி என்ற பாடத்திட்டம் இருந்தாலும் முறையாக பயிற்சி அளிக்கப்படாத நிலையே உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் ஸ்போர்ட்ஸ் விஷயத்தில் அரசை ஏமாற்றவே செய்கின்றன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com