தொடர் மழையால் பூக்கள் விற்பனை கடும் சரிவு: 1 கிலோ மல்லிகை ரூ.180-க்கு விற்பனை
By DIN | Published On : 09th August 2019 07:05 AM | Last Updated : 09th August 2019 07:05 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தோவாளை பூச்சந்தையில் பூக்கள் விற்பனை மந்தமாகியுள்ளது. வழக்கமாக, அதிகாலை முதலே பரபரப்பாக காணப்படும் இந்த சந்தை, வியாழக்கிழமை பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
மதுரை, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து சந்தைக்கு விற்பனைக்கு வந்த சுமார் 5 டன் பூக்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்ததாகவும், இதனால் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மழை தொடர்ந்தால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
தொடர் மழையால் பூக்களின் விற்பனை மட்டுமன்றி விலையும் கடும் சரிவை கண்டது. புதன்கிழமை கிலோ ரூ.500- க்கு விற்பனையான மல்லிகைப்பூ, வியாழக்கிழமை ரூ. 180-க்கும், பிச்சி ரூ.400இல் இருந்து ரூ.200- க்கும், ரூ. 100-க்கு விற்கப்பட்ட அரளிப்பூ ரூ.70-க்கும், ரூ.350-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.200-க்கும் விற்கப்பட்டன.