சுடச்சுட

  

  குடிநீர் திட்டப்பணியால் பெருஞ்சாணிக்கு பேருந்து சேவை முடக்கம்: 20 இல் மறியல் நடத்த முடிவு

  By DIN  |   Published on : 15th August 2019 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்அணை-நாகர்கோவில் குடிநீர்த் திட்டப்பணிக்காக பெருஞ்சாணி செல்லும் சாலை உடைக்கப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அருகே புத்தன் அணையிலிருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் ரூ. 325  கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிக்காக புத்தன் அணையில் தொடங்கி சுருளகோடு, தடிக்காரன் கோணம் வழியாக சாலை உடைக்கப்பட்டு ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 
  இப்பணி காரணமாக பெருஞ்சாணிக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. குலசேகரம், தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட இடங்களிலிருந்து பெருஞ்சாணிக்கு செல்லும் பேருந்துகள் 3 கி.மீ. முன்பு  பொன்மனை அருகே கிழக்கம்பாகம் என்ற இடம் வரை மட்டுமே செல்கின்றன. குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னரும் சாலையை சீரமைத்து பேருந்துகளை இயக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
  சீரமைக்கப்பட்டாத இந்த சாலையில் வாகனங்கள் புதைந்துவிடும் என்பதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பெருஞ்சாணி பகுதியிலிருந்து பொன்மனை, குலசேகரம் உள்பட பல்வேறு பகுதிக்குச் செல்லும் பள்ளி மாணவர், மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 
  20 இல் மறியல்: இதுகுறித்து பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோதங்கராஜ் கூறியது: புத்தன் அணை கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்டவை  ரூ. 325 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிக்காக புத்தன் அணையில் இருந்து நாகர்கோவில் வரை ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் களியல்-அழகியபாண்டிய புரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காக திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை, சுருளகோடு, தடிக்காரன் கோணம் வழியாக குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
  இந்த பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழிகளால் சாலைகள் மோசமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. பேச்சிப்பாறை பெருஞ்சாணியில் இருந்து மாவட்டத்தின் கடை வரம்பு வரை சானல்கள் செல்கின்றன. 
  இந்த சானல்கள் வழியாகத் தண்ணீரை கொண்டு செல்லாமல் குழாய்களை பதித்து சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
  குடிநீர் திட்டப் பணியில் தரமற்ற குழாய்கள் பதித்ததால் தேங்காய்ப்பட்டினம், திங்கள்சந்தை சாலையில் பல இடங்களில் பழுதடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 
  இத்திட்டங்களிலும் தரமற்ற குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. 6 மாதத்திற்கு மேலாக பெருஞ்சாணி, பெருவள்ளிக்கடவு போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள், மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்லுவோர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். 
  இதுகுறித்து ஆட்சியரிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இதனை கண்டித்து வரும் 20 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு பொதுமக்களை திரட்டி சாலை  மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai