புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மாநாட்டில் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு  ஊழியர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.


அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு  ஊழியர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் 11 ஆவது மாநாடு நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவர் எஸ். கனகராஜ் தலைமை வகித்தார்.  மாநாட்டில், அஞ்சலி தீர்மானங்களை மாவட்ட இணைச்செயலர் அருள்சீலி வாசித்தார். செயலர் சி.எஸ்.கிறிஸ்டோபர், பொருளாளர் உ. சுமதி பொருளாளர் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். 
மாநாட்டை, மாநில பொதுச்செயலர் எம். அன்பரசு தொடங்கி வைத்துப் பேசினார். மாநிலச் செயலர் சி.ஆர்.ராஜகுமார், தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாநிலச் செயலர் ஏ.வி.மூர்த்தி ஆகியோர் வாழ்த்திப்பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத் தலைவராக எஸ். கனகராஜ், செயலராக சி.எஸ். கிறிஸ்டோபர், பொருளாளராக உ.சுமதி, துணைத் தலைவர்களாக லீடன்ஸ்டோன், சூரிய நாராயணன், ராயல் ஆறுமுகம், பாலகிருஷ்ணன், துணைச்செயலர்களாக விஜயகுமார், செய்யதலி, வேல்முருகன், சுபின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைத்தலைவர் குமாரவேல் நிறைவுரை ஆற்றினார். 
தீர்மானங்கள்: புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்;  அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; 
சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்; அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை குறைத்து தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; அதற்காக பிறப்பிக்கப் பட்ட அரசாணையை ரத்து செய்யவேண்டும்;  கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விசாகா குழு அமைக்க வேண்டும்; பெண் ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு பின்னரும், விடுமுறை நாள்களிலும் பணியாற்ற நிர்ப்பந்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்; வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
துணைத்தலைவர் லீடன் ஸ்டோன் வரவேற்றார். நாகர்கோவில் கிளைத் தலைவர் எம்.கில்பர்ட் சதீஷ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com