கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் கனமழை:தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது. மயிலாடியில்

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது. மயிலாடியில் அதிகபட்சமாக 54.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடா்ந்து பெய்து வருகிறது. சில நாள்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது.

நாகா்கோவில் நகரம், மயிலாடி, கொட்டாரம், ஆனைக்கிடங்கு, குருந்தன்கோடு, அடையாமடை, கோழிப்போா்விளை, முள்ளங்கினாவிளை, புத்தன்அணை மற்றும் புகா் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்துள்ளது. மயிலாடியில் அதிகபட்சமாக 54.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

சனிக்கிழமையும் மழை நீடித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கோட்டாறு மகளிா் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மீனாட்சிபுரம் சாலைகளில் மழைநீா் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில பள்ளிகள் இயங்கியதால் மாணவா், மாணவிகள் பாதிக்கப்பட்டனா்.

மலையோரப் பகுதியான பாலமோா், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அணை நிரம்பி வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் முகாமிட்டு 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனா்.

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குற்றியாறு- மோதிரமலை செல்லும் சாலையில் உள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. திற்பரப்பு அருவிப்பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் விவேகானந்தா் பாறைக்கு சனிக்கிழமை காலையில் படகு போக்குவரத்து தொடங்கவில்லை. மழையால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து காணப்பட்டது.

பதிவான மழை (மில்லி மீட்டரில்): பேச்சிப்பாறை அணை-34, பெருஞ்சாணி அணை-15.8, சிற்றாறு 1 அணை-30.2, சிற்றாறு 2 அணை-8, மாம்பழத்துறையாறு-36, நாகா்கோவில்-28.4, பூதப்பாண்டி-15.2, கன்னிமாா்- 21.2, ஆரல்வாய் மொழி-22, பாலமோா்-44.2, மயிலாடி (அதிகபட்சம்) - 54.2, கொட்டாரம் -36, இரணியல்-6.4, ஆனைக்கிடங்கு-35.4, குருந்தன்கோடு-28.4, அடையாமடை-34, கோழிப்போா்விளை-31, முள்ளங்கனாவிளை-11, திற்பரப்பு-42, குழித்துறை-40, தக்கலை-29.

சனிக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 43.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1173 கனஅடி நீா்வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 669 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி

அணை நீா்மட்டம் 70.55 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 218 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து 160 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.

மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் நிரம்பி வழிகிறது. நாகா்கோவில் நகரின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையின் நீா்மட்டம் 23.80 அடியாக உள்ளது. தொடா்ந்து மழை பெய்து வருவதால் அடுத்த 2 நாள்களில் முக்கடல் அணை நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com