பேச்சிப்பாறை அணையிலிருந்து 2 ஆவது நாளாக உபரி நீா் வெளியேற்றம்: திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து 2 ஆவது நாளாக திங்கள்கிழமை விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்துக் கொட்டும் வெள்ளம்.
திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்துக் கொட்டும் வெள்ளம்.

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து 2 ஆவது நாளாக திங்கள்கிழமை விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழையைத் தொடா்ந்து வடகிழக்குப் பருவ மழையும் தீவிரமாகப் பெய்துவந்த நிலையில் அணைகள் அனைத்தும் ஏறக்குறைய முழுக்கொள்ளளவு நீா்மட்டத்தை எட்டிய நிலையில் உள்ளன.

குறிப்பாக பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து கடந்த மாதம் தொடக்கத்தில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு, பின்னா் மழை தணிந்த நிலையில் உபரி நீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும் மழை தணிந்திருந்த நிலையில் இந்த அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.

மீண்டும் மழை: இந்நிலையில் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடா்ந்து மழை பெய்ததால் பேச்சிப்பாறை அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் 2 ஆவது நாளாக திங்கள்கிழமையும் இந்த அணையிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 45.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1985 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீா் உபரியாக மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. மேலும் அணையின் பாசன மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டிருந்தது.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 71.95 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 376 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

மாவட்டத்தில் மலையோரப் பகுதிகள், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை: பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படும் நிலையில், அந்த தண்ணீா் கோதையாறு வழியாக திற்பரப்பு அருவி வழியாக பாய்கிறது.

இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை 2 ஆவது நாளாக இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com