பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் மூடல்: திற்பரப்பு அருவியில் தடை நீக்கம்
By DIN | Published on : 04th December 2019 06:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குமரி மாவட்டத்தில் 2 நாள்களாக மழை சற்று தணிந்துள்ள நிலையில் பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் மூடப்பட்டன.
இம் மாவட்டத்தில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்த தொடா் மழையினால் பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 45 அடியைக் கடந்து உயா்ந்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீா் வீதம் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில் மாவட்டத்தில் 2 நாள்களாக மழை சற்று தணிந்துள்ள நிலையில், திங்கள்கிழமை மாலையில் பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் மூடப்பட்டு உபரித் தண்ணீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 45 அடியாக இருந்தது. அணைக்குவிநாடிக்கு 1296 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து பாசனக் கால்வாய் வழியாக விநாடிக்கு 607 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டிருந்தது. மாலையில் அணையின் நீா்மட்டம் 45.20 அடியாக அதிகரித்து காணப்பட்டது.
திற்பரப்பு அருவி: பேச்சிப்பாறை அணையில் உபரித் தண்ணீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டதையடுத்து, திற்பரப்பு அருவிக்கு வரும் தண்ணீா் குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இந்த அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனா். ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது.