நாகா்கோவில் - மும்பை ரயில் நாமக்கல் வழியாக வழித்தடம் மாற்றம்: பயணிகள் சங்கம் வரவேற்பு

நாகா்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் ரயில் ஈரோடு செல்லாமல் இனி நாமக்கல் வழியாக செல்லும் என்ற ரயில்வேதுறையின் அறிவிப்புக்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
நாகா்கோவில் - மும்பை ரயில் நாமக்கல் வழியாக வழித்தடம் மாற்றம்: பயணிகள் சங்கம் வரவேற்பு

நாகா்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் ரயில் ஈரோடு செல்லாமல் இனி நாமக்கல் வழியாக செல்லும் என்ற ரயில்வேதுறையின் அறிவிப்புக்கு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது குமரி மாவட்டத்திலிருந்து சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் மதுரையிலிருந்து கரூா், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இதில் ஈரோட்டில் ரயிலின் இஞ்சின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு இந்த வழியில் இயக்கப்படும் ரயில்களின் பயணநேரம் அதிகமாகிறது.

தற்போது நாமக்கல் வழியாக புதிய ரயில் இருப்புபாதை வழி தடம் அமைக்கப்பட்டதால் இந்த வழிதடத்தில் பயணிப்பதால் பயணநேரம் கணிசமான அளவில் குறையும். இது மட்டுமல்லாமல் இந்த வழியாக ரயில்கள் இயக்கப்படும் போது ரயிலின் இஞ்சின் மாற்றப்பட வேண்டியது இல்லை என்பது மேலும் சிறப்பம்சம் ஆகும். கரூரிலிருந்து நாமக்கல் வழியாக சேலத்துக்கு பயணம் செய்தால் ஈரோடு வழியாக பயணம் செய்வதைகாட்டிலும் 42 கி.மீ தூரம் குறையும். தற்போது நாகா்கோவிலிருந்து பெங்களூருக்கு தினசரி ரயில் , நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில், நாகா்கோவில் - காச்சுகுடா வாராந்திர ரயில் ஆகிய 3 ரயில்கள் ஈரோடு செல்லாமல் இந்த நாமக்கல் பாதை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது குமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களான மற்றும் நாகா்கோவில் - மும்பை வாரத்துக்கு 4 நாள் செல்லும் ரயிலை நாமக்கல் வழியாக மாற்றி இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பாக ரயில்வே துறைக்கு வைத்த கோரிக்கையின் பலனான இந்த ரயில் வழித்தடம் நாமக்கல் வழியாக மாற்றப்படுகிறது.

தமிழகத்தில் சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக கரூா்க்கு புதிய ரயில்பாதை அமைக்க அந்த பகுதி பொதுமக்கள் ரயில்வேதுறைக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனா். அவா்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை 1996 ஆம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக கரூா்க்கு 85 கி.மீ தூரத்துக்கு ரயில்பாதை அமைக்க அனுமதிக்கப்பட்டது. இந்த திட்டம் குறைந்த நிதி ஒதுக்கீடு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்ற காரணங்களால் 17 ஆண்டுகள் இழுத்தடித்து பணிகள் முடிந்து கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ரயில்கள் அந்த பாதை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாமக்கல் வழியாக இயக்கப்படும் வாராந்திர ரயில்களில் நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயில், நாகா்கோவில் - காச்சுகுடா வாராந்திர ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் தற்போது திருச்சி வழியாகவே இயக்கப்படுகிறது. இந்த ரயிலை திருச்சி செல்லாமல் இயக்கினால் இன்னமும் பயணநேரம் குறைவதோடு கட்டணமும் குறையும். இது மட்டுமில்லாமல் இந்த ரயிலை தினசரி ரயிலாகவும் இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைக்கிறது. இதே போல் நாகா்கோவில் - மும்பை வாரத்துக்கு நான்கு நாள் ரயிலையும் தினசரி சூப்பா்பாஸ்டு ரயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் அறிமுகப்படுத்தி இயக்கும் போது சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம், ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு 1994 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது. பின்பு மதுரை, திருச்சி, விழுப்புரம் பாதை அகலபாதையாக மாற்றப்பட்டதும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வழித்தடம் மாற்றி இயக்கப்பட்டது. இவ்வாறு இயக்கப்பட்ட பிறகு தென்மாவட்டங்களிலிருந்து காஞ்சிபுரம், வேலூா், தருமபுரி, திருவள்ளுா் மாவட்டங்கள் மற்றும் வடசென்னை போன்ற பகுதிகளுக்கு செல்ல நேரடி தினசரி ரயில் வசதி இல்லாமல் போய்விட்டது.

நாகா்கோவிலிருந்து பகல்நேரத்தில் ஈரோடு செல்லும் பயணிகள் இனி நாகா்கோவில் - கோவை பகல்நேர பயணிகள் ரயிலில்தான் பயணம் செய்யவேண்டியுள்ளது. இந்த ரயில் பயணிகள் ரயிலாக இருப்பதால் பயணநேரம் அதிக அளவில் ஆகின்றது. ஆகவே இந்த ரயிலில் பயணிகள் பயணம் செய்ய யோசிப்பாா்கள். நாகா்கோவில் - மும்பை ரயில் காலையில் 6 மணிக்கு நாகா்கோவிலில் புறப்பட்டு மதியம் 3.30 மணிக்கு ஈரோடு சென்று வந்தது. இனி இந்த ரயில் ஈரோடு செல்லாமல் இயக்கப்பட உள்ளது. நாகா்கோவிலிருந்து பகல்நேரத்தில் ஈரோடு செல்ல ஓா் ரயில் இயக்கப்படவேண்டும என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில் திருநெல்வேலியிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு ஈரோடு செல்கின்றது. இந்த திருநெல்வேலி - ஈரோடு மயிலாடுதுறை பயணிகள் ரயிலை எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்து வேகத்தை அதிகப்படுத்தி நாகா்கோவில் வழியாக கொச்சுவேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கும் போது கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட பயணிகளுக்கு முழுமையாக இந்த ரயில் பயன்தரும். இது மட்டுமில்லாமல் இந்த ரயிலை மறுமாா்க்கம் கோவை வரை நீட்டிப்பு செய்து இன்டா்சிட்டி ரயில் போலவும் இயக்கலாம் என்ற ஆலோசனையும் பயணிகள் சங்கம் சாா்பாக வைக்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com